தமிழக அரசின் புதிய திட்டம்; 40 இடங்களில் ட்ரெக்கிங் செல்லலாம்; மலையேற்ற பாதைகளின் முழு லிஸ்ட் இங்கே

தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தை தொடங்கி வைத்த உதயநிதி; ஆன்லைனில் முன்பதிவு செய்து 40 இடங்களில் ட்ரெக்கிங் செல்லலாம்; எந்தெந்த இடங்கள் என்ற முழு விபரம் இங்கே

தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தை தொடங்கி வைத்த உதயநிதி; ஆன்லைனில் முன்பதிவு செய்து 40 இடங்களில் ட்ரெக்கிங் செல்லலாம்; எந்தெந்த இடங்கள் என்ற முழு விபரம் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trekking Tamilnadu

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு மலையேற்ற திட்டம் (TREK TAMIL NADU) மற்றும் இணைய வழி மலையேற்ற முன்பதிவு தளத்தை தொடங்கி வைத்து, வழிகாட்டிகளுக்கு சீருடைகள், மலையேற்றக் காலணிகள், திசைக்காட்டி உள்ளிட்ட மலையேற்ற உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

Advertisment

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (24.10.2024) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் இத்திட்டத்தின் இலச்சினையினை வெளியிட்டு, இணையவழி முன்பதிவிற்காக www.trektamilnadu.com என்ற பிரத்யேக வலைதளத்தையும் தொடங்கி வைத்தார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; “இத்திட்டம் தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் (TNWEC) மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் (TNFD) கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த 'தமிழ்நாடு மலையேற்ற திட்டம்' வடிவமைக்கப்பட்டுள்ளது. 

வனப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் மக்களை இத்திட்டத்தில் அதிக அளவில் ஈடுபடுத்தும் இம்முயற்சி மாநிலத்தில் சூழல் சுற்றுலாவை வலுப்படுத்துவதற்கான ஒரு முன்னெடுப்பாகும். இவ்வாறு வாகன பயன்பாடு இல்லாத குறைந்த கார்பன் தடம், நிலைத்தன்மை கொண்ட சுற்றுலாவை ஊக்குவிப்பது, சூழல் சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் பசுமைச் சூழல் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு கொண்டுள்ள உறுதித்தன்மையை காட்டுகிறது.

இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக, இந்திய நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை பொது மக்களுக்காக திறந்து வைத்துள்ளது. சுற்றுலாவில் நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 

இயற்கை ஆர்வலர்களால் பெரிதும் போற்றப்படும் வகையில் தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து புலிகள் காப்பகங்கள், ஐந்து தேசிய பூங்காக்கள், பதினெட்டு வனவிலங்கு சரணாலயங்கள், பதினேழு பறவை சரணாலயங்கள் மற்றும் மூன்று பாதுகாப்பு காப்பகங்களை கொண்டுள்ளது. 

நீலகிரி. கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களை உள்ளடக்கி தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் உள்ள மலையேற்றப்பாதைகள், தமிழ்நாடு வனத்துறையால் தமிழ்நாடு வன மற்றும் உயிரின (மலையேற்ற ஒழுங்குமுறை) விதிகள் 2018-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் குறித்த பாரம்பரிய அறிவைக் கொண்ட 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு. மலையேற்ற வழிகாட்டிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கு வன ஒழுக்கம், திறன் மேம்பாடு. முதலுதவி, விருந்தோம்பல் மற்றும் சுகாதாரம், பல்லுயிர் பாதுகாப்பு போன்றவற்றில் போதுமான தொழில்முறை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 

மலையேற்றத்திற்கு வரும் ஆர்வலர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற வழிகாட்டிகளுக்கு அவசர நிலைகளைக் கையாளுவதற்கான பாதுகாப்பு நெறிமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகாட்டிகளுக்கு சீருடைகள், மலையேற்றக் காலணிகள், முதுகுப்பை, தொப்பி, அடிப்படை முதலுதவிப் பெட்டி, தண்ணீர் குடுவை. வெந்நீர் குடுவை, மலையேற்றக் கோல், தகவல் தொடர்பு சாதனங்கள். விசில் மற்றும் திசைக்காட்டி ஆகியவை அடங்கிய மலையேற்ற உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இத்திட்டத்தின் கீழ் மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்குக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள மக்கள் நிலையான வருமானம் ஈட்டவும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இந்த முன்னெடுப்பு உதவும். 

பொது மக்களுக்கு முன்பதிவு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்தும் வகையில், தொடங்கப்பட்டுள்ள (www.trektamilnadu.com) பிரத்யேக முன்பதிவு வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் தங்கள் முன்பதிவினை எளிதாக செய்ய உதவும் வகையில் புகைப்படம், காணொளிக்காட்சிகள், 3D அனிமேஷன். மலையேற்ற பாதைகள் தொடர்பான அத்தியாவசிய விவரங்கள், விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இவ்வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் 100% இணையவழி பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு மலையேற்றத்திற்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும்.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். 18 வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர் / பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் மேற்கொள்ளலாம். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

40 மலையேற்றப் பாதைகள்

நீலகிரி மாவட்டம்: கய்ர்ன் ஹில் (எளிது), லாங்வுட் ஷோலா (எளிது), கரிகையூர் முதல் போரிவரை ராக் பெயிண்டிங் (மிதமானது), கரிகையூர் முதல் ரங்கசாமி சிகரம் (கடினம்), பார்சன்ஸ் வேலி முதல் முக்குர்த்தி குடில் (கடினம்), அவலாஞ்சி - கோலாரிபெட்டா (கடினம்), அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா) - தேவார்பெட்டா (கடினம்), அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா) - கோலாரிபெட்டா (மிதமானது). ஜீன் பூல் (எளிது), நீடில் ராக் (கடினம்). 

கோயம்புத்தூர் மாவட்டம்: மாணம்போலி (எளிது), டாப் ஸ்லிப் -பண்டாரவரை (கடினம்), ஆலியார் கனால் பேங்க் (மிதமானது), சாடிவயல் - சிறுவாணி (மிதமானது), செம்புக்கரை - பெருமாள்முடி (கடினம்), வெள்ளியங்கிரி மலை (கடினம்), பரலியார் (எளிது).

திருப்பூர் மாவட்டம்: சின்னார் சோதனைச்சாவடி கோட்டாறு (எளிது), காலிகேசம் பாலமோர் (மிதமானது). 

கன்னியாகுமரி மாவட்டம்: இஞ்ஜிக்கடவு (மிதமானது). 

திருநெல்வேலி மாவட்டம்: காரையார் மூலக்கசம் (மிதமானது), கல்லாறு கொரக்கநாதர் கோவில் (கடினம்). 

தென்காசி மாவட்டம்: தீர்த்தப்பாறை (எளிது), குற்றாலம் செண்பகதேவி நீர்வீழ்ச்சி (எளிது), 

தேனி மாவட்டம்: சின்ன சுருளி - தென்பழனி (மிதமானது), காரப்பாறை (எளிது), குரங்கனி சாம்பலாறு (மிதமானது). 

விருதுநகர் மாவட்டம்: செண்பகத்தோப்பு - புதுப்பட்டி (மிதமானது). 

மதுரை மாவட்டம்: தாடகை மலையேற்றப்பாதை - குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி (கடினம்). 

திண்டுக்கல் மாவட்டம்: வட்டகானல் - வெள்ளகவி (கடினம்), சோலார் ஆப்சர்வேட்டரி - குண்டாறு (0-பாயிண்ட்) (மிதமானது), 0-பாயிண்ட் -கருங்களம் நீர்வீழ்ச்சி (எளிது). 

கிருஷ்ணகிரி மாவட்டம்: குத்திராயன் சிகரம் (கடினம்), ஐயூர் சாமி எரி (எளிது). 

சேலம் மாவட்டம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா குண்டூர் (மிதமானது), கொண்டப்ப நாயக்கன்பட்டி குண்டூர் (கடினம்), நகலூர் - சன்னியாசிமலை (எளிது). 

திருப்பத்தூர் மாவட்டம்: ஏலகிரி சுவாமிமலை (மிதமானது), ஜலகம்பாறை (எளிது). இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Trekking Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: