Udhayanidhi Stalin Latest Tamil News: திமுக கூட்டணி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தைவிட, இளைஞரணி மாநிலச் செயலாளருக்கு வேறு என்ன பெரிய வேலை? என கட்சியினரே விவாதிக்கிறார்கள்.
டெல்லியில் விவசாய அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் திமுக கூட்டணி உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாள் குறித்தது. இதில் அதிக அளவில் தொண்டர்களை பங்கேற்க வைக்கும் விதமாக மாவட்ட அளவில் திமுக கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டங்களும்கூட நடந்தன.
டிசம்பர் 18 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்தில், எதிர்பார்த்தபடியே அதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் இதில் பேசினர். கனிமொழி, பொன்முடி உள்ளிட்ட திமுக முன்னணியினர் பெரும்பான்மையினரும் இதில் பங்கேற்றனர். ஆனால் திமுக.வின் முக்கிய சார்பு அமைப்பான இளைஞரணியின் மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதில் கலந்து கொள்ளவில்லை.
பெரும்பாலும் உதயநிதியுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திருச்சி மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் இதில் தனியாக கலந்து கொண்டார். உதயநிதிக்கு அன்று வேறு முக்கிய நிகழ்ச்சிகள் எதுவும் அரசியல் ரீதியாக இல்லை. அவர் ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கான காரணம் எதுவும் அதிகாரபூர்வமாக கூறப்படவில்லை. அவரது ட்விட்டர் பக்கத்திலும் இது தொடர்பான பதிவுகள் இல்லை. அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டாலின் மற்றும் கூட்டணித் தலைவர்களுடன் தானும் பங்கேற்ற படத்தை பதிவு செய்திருந்தார்.
உதயநிதி பங்கேற்காதது குறித்து திமுக வட்டாரத்தில் கூறுகையில், ‘முழுக்க ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் உதயநிதி பங்கேற்றால், தொண்டர்களின் கவனம் சிதறும். அந்த அடிப்படையில் அவர் தவிர்த்திருக்கலாம். ஆனால் இது சரியல்ல. கலைஞர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஏதாவது ஒரு முக்கியப் போராட்டத்தை ஸ்டாலின் கடந்த காலங்களில் தவிர்த்திருக்க முடிந்ததா? கலைஞர் அதை அனுமதித்திருப்பாரா?
உதயநிதி போன்றவர்கள் முன்னால் நின்றால்தான் இளைஞரணி நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து களம் இறங்குவார்கள். அவரே விலகிக் கொண்டால், அந்த அணியின் தொண்டர்கள் எப்படி முன்னால் வருவார்கள். யாரோ தவறான ஆலோசனை கொடுத்து உதயநிதியை தடுத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது’ என ஆதங்கப்பட்டனர்.
உதயநிதி பங்கேற்காதது, சமூக வலைதளங்களில் சர்ச்சை ஆகிறது. பாஜக கலைப்பிரிவு தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், ‘விவசாயிகளுக்கான போராட்டத்தில் உதயநிதி கலந்து கொள்ளாமல் விட்டது ஏன்? போராட்டத்தைவிட முக்கியமான வேலையா?
இல்லையெனில், விவசாய வேளான் சட்டங்கள் குறித்து தனது தந்தை சொல்வது பொய் என்பதால் தன் தந்தை நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை புறக்கணித்தாரா உதயநிதி!’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஒரு போராட்டத்தில் கூட்டணிக் கட்சியினரை பங்கேற்க அழைப்பு விடுத்துவிட்டு, பெரிய கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரே ‘விடுமுறை’ எடுத்துக் கொள்வது நியாயப்படுத்த முடியாத செயலே!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"