தி.மு.க இளைஞர் அணி செயலாளர், சேப்பாக்கம் எம்.எல்.ஏ, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதோடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 3 புதிய அமைச்சர்கள் நியமித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாமீனில் வெளி வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 3 புதிய அமைச்சர்கள் இன்று (செப்.29) மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்கின்றனர்.
இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“