டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அடுத்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசினார்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவை சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்த தமிழக விளையாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிறைவு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமரைச் சந்தித்து அழைப்பிதழை வழங்கிய நிலையில் தொடர்ந்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரையும் சந்தித்து உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார். அதன்பின், மத்திய அமைச்சர்கள் சிலரையும் சந்தித்து தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி தொடர்பாக பேசுவார் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது கேலோ இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“