/tamil-ie/media/media_files/uploads/2022/12/Udhayanidhi-3.jpg)
Udhayanidhi stalin
தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
உதயநிதி அமைச்சர் ஆனதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், அதற்கு விளக்கமளிக்கு வகையில் உதயநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் எனக் கழக முன்னோடிகள் வரிசையில், களம் பல கண்ட போராளியான முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டலின் கீழ் தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று இணைகிறேன்.
திராவிட மாடல் அரசை வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அமைச்சரவையில் இன்று இணைகிறேன். இந்தப் பொறுப்பையும் நான் சவாலாக எடுத்துக்கொண்டு, என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன். விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன். அன்பும், நன்றியும். pic.twitter.com/aSQfm435LD
— Udhay (@Udhaystalin) December 14, 2022
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஜூலை 4 ஆம் நாள் கழக இளைஞர் அணி செயலாளராகத் தலைவர் என்னை நியமித்தார்கள். அதற்கு, என்னை நியமித்தபோதும், இன்று நான் எதிர்கொள்ளும் விமர்சனங்களை, அழுத்தத்தை அன்றும் உணர்ந்திருந்தேன்.
'நம்மை நம்பி தலைவர் அவர்கள் வழங்கிய பொறுப்பு. அதற்கு உண்மையாக வேலை பார்க்க வேண்டும்' என்பதை உணர்ந்து இளைஞர் அணி சகோதரர்களுடன் இணைந்து உழைக்கத் தொடங்கினோம். கழகம் ஆட்சியில் இல்லாதபோதும், இளைஞர் அணியினரைக் கொண்டு பல்வேறு மக்கள் பணிகளைச் செய்யத் தொடங்கினோம். ஊரடங்கு காலத்தில், ஒன்றிய அரசும், அப்போதைய மாநில அரசும் செயலற்று நின்ற நேரத்தில், கழகத்தின் இளைஞர் அணி சார்பில் களப்பணிகளைச் செய்தோம்.
இளைஞர் அணியில் தொகுதிக்கு தலா 10 ஆயிரம் பேர் எனத் தமிழகம் முழுவதும் 25 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தோம். அவர்களிலிருந்து தகுதியின் அடிப்படையில் 3.5 லட்சம் பேரை ஒன்றிய கிளைகளிலும் பகுதி-நகர-பேரூர் வார்டுகளிலும் நிர்வாகிகளாக நியமித்தோம்.
இளைஞர் அணி பொறுப்புடன், கூடுதலாகச் சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பினையும் கழகத் தலைவர் அவர்கள் அளித்தார்கள். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், முன் மாதிரி தொகுதியாக்க என்னாலான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பொதுமக்கள் - அரசு நிர்வாகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செல்ல அதிக பொறுமை தேவை. அந்த வகையில், தொகுதி மக்களின் பிரதிநிதியாக எனது அனுபவம் எனக்கான கடமையை உணர்த்தியுள்ளது.
இப்படியான நிலையில்தான், முதலமைச்சர் தனது அமைச்சரவையில் எனக்கு இடமளித்து, கடமையாற்றப் பணித்துள்ளார். இந்தப் பொறுப்பையும் நான் சவாலாக எடுத்துக்கொண்டு என் பணியைச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்வேன். இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எதிர்கொண்ட அதே விமர்சனக் கணைகளை, அமைச்சர் அறிவிப்பின் போதும் எதிர்கொள்கிறேன். 'விமர்சனங்களை என் செயலால் எதிர்கொள்வேன்' என்று அன்று பதிலளித்து இருந்தேன்.
அமைச்சர் பொறுப்பிலும் என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன். அமைச்சர் பொறுப்பேற்கும் இந்த நேரத்தில் என்னை உச்சி முகர்ந்து வாழ்த்த முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் தாத்தாக்கள் அருகில் இல்லாதது மிகப்பெரிய வருத்தம்.
அவர்களின் மறுஉருவாக வாழும் நம் முதலமைச்சர் அவர்களுக்கு, கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் - என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்கள், இளைஞர் அணியினர், தமிழ் மக்கள் ஆகியோரின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பணியைத் தொடர்வேன் என்று இந்த நேரத்தில் உறுதியளிக்கிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.