திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே அவர் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது உதயநிதியின் காரில் செய்யப்பட்டுள்ள மாற்றம் ல யூகங்களை கிளப்பியுள்ளது.
திமுகவின் இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அரசியலில் பிஸியாக இருக்கிறார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தவறாமல் கலந்துகொள்கிறார். திமுக நிகழ்ச்சிகளிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொண்டு பம்பரமாக சுழன்று வருகிறார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதுமே அமைச்சரவையில் யார் யார் இடம் பெறப் போகிறார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் அமைந்த பெயர் பட்டியல் சமூக ஊடகங்களில் வெளியானது. அப்படி வெளியான பட்டியல்கள் எல்லாவற்றிலும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயர் தவறாமல் இடம்பெற்றது. நிச்சயமாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை பட்டியல் வெளியானபோது, அதில் உதயநிதியின் பெயர் இடம்பெறவில்லை. இது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றமாக அமைந்தது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 1 ஆண்டு நிறைவடையப் போகிறது. ஆனால், இன்னும், உதயநிதி விரைவில் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் பேச்சுகளும் அப்படியேதான் உள்ளன. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, சேகர் பாபு போன்றவர்கள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற தங்களின் விருப்பங்களை வெளிப்படையாகவே தெரிவித்தனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி எப்போது கிடைக்கும் என்ற கேள்வி தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில்தான், உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகளைக் கிளப்பி விட்டுள்ளது.
அண்மையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முடித்துவிட்டு, வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதயநிதியின் காரில் தவறுதலாக ஏற முயன்றார். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் வேகமாக வந்து இது உங்கள் கார் இல்லை சார் என்று சொல்ல எடப்பாடி பழனிசாமி சுதாரித்துக்கொண்டு அவருடைய காரை நோக்கி சென்றார். இந்த சம்பவம் பல ஊடகங்களில் செய்தியாக வெளியானது. இதற்கு காரணம், உதயநிதியின் காரும் இ.பி.எஸ்-சின் காரும் ஒரே மாதிரியாக இருப்பதுதான் என்று சொல்லப்பட்டது.
இ.பி.எஸ் உதயநிதியின் காரில் ஏற முயன்றதை, அனைக்கட்டு எம்.எல்.ஏ உதயநிதியிடம் கூற, அதற்கு உதயநிதி தானும் ஒரு முறை எடப்பாடி பழனிசாமியின் காரில் தவறுதலாக ஏற முயன்றதாகக் கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமி எனது காரைக் கூட எடுத்துச் செல்லட்டும். ஆனால், கமலாலயத்துக்கு மட்டும் போய்விடக் கூடாது என்று கம்மெண்ட் அடிக்க அரசியல் கடந்து உதயநிதியின் நகைச்சுவை அனைவரின் மத்தியிலும் சிரிப்பை ஏற்படுத்தியது. ஆனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உதயநிதிக்கு கமலாலயம் வர அருகதை இல்லை என்று பதிலடி கொடுத்தார்.
திமுக ஆட்சி அமைந்து ஒராண்டு நிறைவடைய உள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில், உதயநிதி தனது காரில் செய்துள்ள மாற்றம் அமைச்சராகப் போகிறாரா என்ற யூகங்களை எழுப்பியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் காரில் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்தான் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போகிறது என்ற பேச்சுக்கு காரணமாக அமைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் காரில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் அமைச்சர்களின் கார்களில் இலச்சினைப் பொருத்துவதற்கானது. அதே போல, உதயநிதியின் காரில் பொருத்தப்பட்டுள்ளதால், உதயநிதி அமைச்சர் பதவிக்கு தயாராக உள்ளதாகவும் அதனால்தான் இந்த மாற்றம் செய்துள்ளார் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா, இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த சூழலில், உதயநிதியின் காரில் செய்யப்பட்டுள்ள மாற்றம் இந்த யூகங்களை வலுப்படுத்துவதாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.