Udhayanidhi Stalin Visit Triplicane Child Hospital News Tamil : சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கஸ்தூரிபாய் காந்தி குழந்தைகள் நல மருத்துவமனை தமிழகத்திலேயே ,மிகப் பெரிய தாய்-சேய் நல மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. பிரசவம், தாய் சேய் நலம், பொது மருத்துவம் என சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை எதிர்பாராத விதமாக மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில், தாய்-சேய் நல பிரிவின் இரண்டாம் தளத்தில், குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருக்கும் அறையில் தீ பிடித்துள்ளது. குறிப்பிட்ட அந்த அறையில் மட்டும் சுமார் 30 பச்சிளம் குழந்தைகள் இருந்துள்ளனர். குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பிடித்த நிலையில், அறையின் சுவர்களில் மழமழவென தீ பரவ தொடங்கியதால், கரும்புகை வெளியேற தொடங்கியது.
மருத்துவமனை அறையில் தீ பரவிய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், தீயணைப்பு வாகனம் மருத்துவமனைக்கு விரைந்தது. இந்த நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்த உதயநிதி, உடனடியாக கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்ற சில நிமிடங்களில் தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்தை வந்தடைந்துள்ளது.
இன்குபேட்டரில் குழந்தைகள் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் கரும்புகை பரவினால் குழந்தைகளுக்கு அபத்து நேரிடக் கூடிய சூழலில், மருத்துவமனை செவிலியர்கள் இன்குபேட்டரில் இருந்த 2 குழந்தைகள் உள்பட, 30 குழந்தைகளையும் அந்த அறையில் இருந்து காப்பாற்றி, மருத்துவமனையின் கீழ் தளத்தில் உள்ள மற்றொரு அறைக்கு மாற்றி உள்ளனர். தீ விபத்தினால், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் செவிலியர்கள் செயல்பட்டதால், குழந்தைகள் அனைவரும் தற்போது நலமாக உள்ளனர்.
சம்பவ இடத்தை தகவல் கிடைத்த சில நிமிடப் பொழுதுகளில் அடைந்து, கள நிலவரம் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய மீட்பு மற்றும் மாற்று பணிகள் குறித்தும் எம்.எல்.ஏ உதயநிதி கேட்டறிந்தார். மேலும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடம் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். உதயநிதியோடு துறைமுகம் எம்.எல்.ஏவும், அமைச்சருமான சேகர் பாபுவும் உடனடியாக விரைந்து மருத்துவமனையை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளையும், தாய்மார்களையும் சந்தித்த உதயநிதி, அவர்களிடம் ஆறுதல் கூறியதோடு, சிகிச்சைக்கான மாற்று ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.
தீ விபத்து குறித்த செய்தி அறிந்து சில நிமிடங்களிலேயே, சம்பவ இடத்திற்கு விரைந்த எம்.எல்.ஏ உதயநிதியின் துரிதமான செயலை திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் நெகிழ்ச்சியுடன் வாழ்த்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.