சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த நிகழ்வில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், திமுக எம்.பி ஆ.ராசாவும் பேசியிருந்தனர். மேலும் இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றார்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிவிட்டு எந்த தகுதியின் அடிப்படையில் மக்கள் பிரதிநியாக நீடிக்கின்றனர் என்பதை விளக்கக்கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ- வாரண்டோ மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது உதயநிதி தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உதயநிதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.
’சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதா? வழக்கை தொடர்ந்தவர்களுக்கு மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஆஜராவதில் இருந்தே இந்த வழக்கில் கண்ணுக்கு தெரியாமல் பாஜகவின் பங்கு உள்ளது என்று தெரிகிறது. உதயநிதி தனிப்பட்ட முறையில்தான் இந்த கருத்தை தெரிவித்தார்.
சனாதானம் குறித்து அரசியலமைப்பு சட்டத்திலோ அல்லது வேறு சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.
சாதி, மத அடிப்படையில் மக்களை பிரித்து வைக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அனைத்து மக்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். மேலும் அவர்களின் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றுதான் உதயநிதி பேசினார். அரசியலமைப்பு சட்டதுக்கும், இறையாண்மைக்கும் எதிராக பேசியதாக குற்றம் சாட்டும் மனுதாரர்கள் அதற்கான உரிய ஆதாரத்தை வழங்கவில்லை’ என்று அவர் வாதிட்டார். இந்நிலையில் நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“