Karnan Movie : மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொடியன்குளம் வன்முறையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், எந்த ஆண்டு இந்த வன்முறை அரங்கேறியது என்பது குறித்து தொடர்ந்து சர்ச்சை ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் நிலவி வருகிறது.
Advertisment
1995-ல் கொடியன்குளம் கலவரம் நடந்த நிலையில் 1997-ல் நடைபெற்றதாக படத்தில் காட்டப்பட்டுள்ளது. கலைஞரின் ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படுவது வரலாற்றை திரித்து கூறும் நிகழ்வாகும் என்று பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதனை சுட்டிக் காட்டியுள்ளார். இது தொடர்பாக தயாரிப்பாளரிடம் பேசிய போது அவர் மாற்றுவதாக கூறியுள்ளார் என்று 13ம் தேதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
படக்குழுவினர் தற்போது படத்தில் வருடம் குறித்து வெளியிடப்படும் பகுதியை 90களின் பிற்பகுதி என்று மாற்றியுள்ளது. இதற்கும் ஆங்காங்கே எதிர்ப்பு குரல்கள் வந்த நிலையில் உதயநிதி, கர்ணன் தொடர்பாக முகநூலில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் ”ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எனவே இந்த விசயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம்” என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil