Udhayanidhi Stalin praised by neitizens for his twitter share: ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ததை சமூக வலைதளங்களில் பகிரும்போது, அந்தக் குழந்தைகளின் முகத்தை மறைத்து, அந்த மாணவிகளின் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுத்து புகைப்படத்தைப் பகிர்ந்ததற்காக உதயநிதி ஸ்டாலினை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவரது பயணங்கள், பிரச்சாரம், மேடைப் பேச்சு, நலத்திட்ட உதவிகள் எனப் பலவற்றையும் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: ஆன்லைன் ரம்மி தடைக்கு விரைவில் அவசரச் சட்டம்: அமைச்சரவையில் முடிவு
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நேற்று பகிர்ந்த பதிவு ஒன்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி, அவர்களோடு சில மணிநேரம் இருந்துவிட்டுச் சென்றார்.
இது தொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தஞ்சை மத்திய மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் செந்தில்குமார் ஏற்பாட்டில், தஞ்சாவூர் கணபதி நகரில் உள்ள ஆதரவற்ற சிறுமியர் இல்லத்தில் வசிக்கும் சிறுமியர்களுக்கு மதிய உணவு வழங்கி மகிழ்ந்தோம்,” என பதிவிட்டு, அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த குறிப்பிட்ட பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம் அந்த ஆதரவற்ற குழந்தைகளின் முகத்தை மறைத்து உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். வழக்கமாகத் தலைவர்கள் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை அப்படியே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடுவார்கள். ஆனால், உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் குழந்தைகளின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. அந்த மாணவிகளின் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுத்து புகைப்படம் பகிரப்பட்டிருந்ததைப் பார்த்த நெட்டிசன்கள் இது ஒரு நல்ல விஷயம் என உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil