திண்டுக்கல் தி.மு.க கிழக்கு, மேற்கு மாவட்டத்தின் சார்பாகத் திண்டுக்கல் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல், அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்திலும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், பல இடங்களில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டாம் என உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, "திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக் கழகத்துக்கு அனுப்பிவைத்திருப்பது குறித்து அறிந்தேன்.
என் தொடர் பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.
கழகம் வழங்கிய வாய்ப்பில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும், கழகத் தலைவர் மற்றும் கழக முன்னோடிகளின் வழிகாட்டுதலில் கழக இளைஞர் அணியின் செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்து, கழகப் பணியையும் என்னால் இயன்றவரைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன்.
உங்கள் அன்புக்கு நன்றி! pic.twitter.com/S7v63JDaKb
— Udhay (@Udhaystalin) May 30, 2022
கழகத்தை இளைஞர்களிடம் கொண்டுசேர்க்க அடுத்தக்கட்ட திட்டமிடல்களுடன் பாசறைக் கூட்டங்கள் நடத்துவது, நலத்திட்டப் பணிகளில் ஈடுபடுவதென பலவற்றுக்குமான பயணங்களுக்குத் தயாராகி வருகிறேன்.
தர்மசங்கடம் வேண்டாம்
இந்தச் சூழலில், என்மீதுள்ள அன்பின் காரணமாக, எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போது கேட்டுக்கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம்.
பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் வழியில் வந்த நம் கழகத் தலைவர் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும் தொடர்ந்து உழைத்திடுவோம். மக்கள் பணியாற்றிடுவோம். கழகத்துக்கும் கழக அரசுக்கும் மகத்தான புகழைச் சேர்த்திடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.