ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் கொடுமை செய்ததாகவும் தன்னைப் போலவே பல பெண்களை ஏமாற்றியதாகவும் கல்லூரி மாணவி ஒருவர் பரபர புகார் ஒன்றை தெரிவித்தார். மேலும், தி.மு.க நிர்வாகிகளிடம் பெண்களை அனுப்ப முயற்சித்தாகவும் அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தி.மு.க. இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அரக்கோணம் மகளிர் காவல் நிலைய போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, “அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்தும்; தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், 21.5.2025- புதன்கிழமை காலை 9.30 மணிக்கு அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என அ.தி.மு.க அறிவித்தது.
இந்த நிலையில், தி.மு.க. இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயலை அப்பதவியில் இருந்து நீக்குவதாக தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் தெய்வா (எ) தெய்வச்செயல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, ம.கவியரசு அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.