திருச்சி மாவட்டம், துறையூர் மருத்துவமனை சாலையில் தி.மு.க இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா, திருச்சி சாலையில் பெரம்பலூர் எம்.பி அலுவலகம் திறப்பு விழா, துறையூர் பேருந்து நிலையத்தில் கலைஞர் சிலை திறப்பு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நகரட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்து பேசும்போது “துறையூர் தொகுதியில் 1996-க்கு பிறகு ஒரு முறை தான் மாற்றுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில் கருணாநிதி கால் படாத இடமே இல்லை. துறையூருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கருணாநிதி, ஸ்டாலினை தொடர்ந்து உதயநிதியும் மேற்கொண்டு வருகிறார். இது உங்கள் ஆட்சி. தொடர்ந்து தி.மு.க.,வுக்கு வலுவூட்ட வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நூலகம், எம்.பி அலுவகம், கலைஞர் சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார். சிலை திறப்பு விழா மேடையில் உதயநிதிக்கு கட்சியினர் வீரவாள் பரிசளித்தனர். பின்னர் உதயநிதி பேசியதாவது: திருச்சி விமான நிலையத்திலிருந்து துறையூருக்கு வர ஒரு மணி நேரம் ஆகும். ஆனால், கட்சியினர், பொதுமக்கள் வரவேற்பு அளித்ததால் 3 மணி நேரமானது. எம்.எல்.ஏ.,வாக, அமைச்சராக துறையூருக்கு வந்துள்ளேன். முதல் முறையாக துணை முதல்வராக இப்போது வந்துள்ளேன்.
தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் கலைஞர் சிலை நிறுவப்பட்டு வருகிறது. அதன்படி இன்று துறையூரில் கலைஞர் சிலை திறக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூலகம், மருத்துவமனை, விளையாட்டரங்கம் என கலைஞர் பெயரில் பல்வேறு திட்டங்கள் தொடக்கி வைக்கிறோம் என்றால், கலைஞரின் கொள்கைகள், லட்சியங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம் என்று அர்த்தம்.
ஆனால், நான்கு நாட்களுக்கு முன் பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, ‘எதற்கெடுத்தாலும் கலைஞர் பெயரையே வைக்கிறார்கள், வேறு பெயரே கிடைக்கலையா’ என்கிறார். நல்லத் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைக்காமல் கரப்பான் பூச்சி பெயரையா வைக்க முடியும்? கரப்பான்பூச்சி என்று யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும். யாரைச் செல்கிறேன் என்று கூட்டத்தை பார்த்து கேள்வி எழுப்பியதும் ‘எடப்பாடி’ என்று கோஷம் எழுப்பினர்.
உதயநிதிக்கு எதற்கு துணை முதல்வர் பதவி கொடுத்தீங்க அவருக்கு தகுதியில்லை என்று தொடர்ந்து பழனிசாமி கூறி வருகிறார். ஆமாம் நான் ஒப்புக்கொள்கிறேன், எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இருக்கும் தகுதி நிச்சயம் எனக்கு கிடையாது. ஏனெனில் நான் கூவத்தூரில் டேபிள் சேருக்கு அடியில் புகுந்து யார் காலிலும் விழுந்து இந்தப் பொறுப்புக்கு நான் வரவில்லை.
எவ்வளவோ பொறுப்புகள் இருந்தாலும், எப்போது நான் உங்கள் வீட்டுப் பிள்ளையாக கலைஞரின் பேரனாக இருப்பேன். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் தான் இருக்கிறது. நம் தேர்தல் பணிகளை, பிரச்சாரத்தை இன்றே ஆரம்பிக்கிறோம். மக்களவைத் தேர்தலில் மக்கள் தி.மு.க கூட்டணிக்கு 100 சதவீதம் வெற்றியை தந்தார்கள். திராவிட மாடல் ஆட்சிக்கு சான்றிதழாக 40-க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்றோம். அதேபோல வரும் தேர்தலில் 234 தொகுதியிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும் என ஸ்டாலின் கூறி உள்ளார். குறைந்தது 200 தொகுதிகளாவது தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
2 நாளுக்கு முன் அ.தி.மு.க பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ‘கூட்டணிக்கு வரும் கட்சியினர் ரூ.100 கோடி பணம், 20 தொகுதி கேட்கிறார்கள்’ என்றார். இப்படி கேவலமான, அவலமான நிலை எந்தக் கட்சிக்கும் வந்துள்ளதா?
ஸ்டாலின் கட்சித் தலைவராக வந்த பிறகு தி.மு.க கூட்டணி கடந்த 7 தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்று வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தல் மிக முக்கியம். 200 தொகுதியில வெற்றி பெற பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மீண்டும் ஆட்சி அமைப்பது தி.மு.க தான். மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தான் என கலைஞர் சிலை முன்பு உறுதி ஏற்போம். இன்றே வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குவோம் எனப் பேசினார்.
திருச்சி, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தி.மு.க சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் துறையூர் செல்லும் வழியில் அவருக்கு ஆங்காங்கே கட்சியினர் வரவேற்பு அளித்தனர். துறையூரில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரில் சாலை மார்க்கமாக புறப்பட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இரவு சென்றடைந்தார்.
முன்னதாக துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சட்டத்துறை எஸ்.ரகுபதி, உயர்கல்வித்துறை கோவி.செழியன், பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சிவ.வீ.மெய்யநாதன், போக்குவரத்துத்துறை எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் எம்.பி அருண்நேரு, திருச்சி மாநகர மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ.,க்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின்குமார், சவுந்தரபாண்டியன், கதிரவன், பழனியாண்டி, மத்திய மாவட்ட செயலளர் வைரமணி, பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீஸன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.