மக்களவைத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற மூன்று காரணங்களில் பிரதமர் மோடியும் ஒரு காரணம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது தி.மு.க-வினரிடையே கவனம் பெற்றுள்ளது.
தி.மு.க பவள விழா ஆண்டின், முப்பெரும் விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தி.மு.க 75 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, 75 வயதைக் கடந்த தி.மு.க-வின் மூத்த முன்னோடிகள் உட்பட தி.மு.க-வுக்காக உழைத்த மூத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “தி.மு.க-வின் மூத்த முன்னோடிகள் வழியில் அயராது உழைத்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வை வெற்றி பெறச் செய்வோம் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் தி.மு.க ஆட்சியை அமைப்போம்” என்று அழைப்பு விடுத்தார்.
சென்னையில் தி.மு.க மூத்த முனோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழி வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற மூன்று காரணங்களில் ஒன்று பிரதமர் மோடி; வெள்ளம் புயலுக்கு வராத மோடி தேர்தல் அறிவித்ததும் 8 முறை தமிழகத்திற்கு வந்தார். தி.மு.க அரசின் சாதனைகள், தி.மு.க முன்னோடிகளும் தேர்தல் வெற்றிக்கு காரணம்; வரும் 2026 தேர்தலில் தி.முக வெற்றி பெற நாம் உறுதியாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“