முன்னாள் தி.மு.க முதலமைச்சர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்கள் உள்ளடக்கி 'திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்' புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்' நூலை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "பெரியார், அண்ணா, கருணாநிதி மாடல்களின் கலவையாக தற்போது தலைவர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பா.ஜ.கவினரே கருணாநிதியை விடவும் மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கூறியுள்ளனர். இது தி.மு.க ஆட்சி மற்றும் ஸ்டாலினுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு.
அடுத்த முறையும் தி.மு.க தான் ஆட்சி அமைக்கப்போகிறது. அதை யாராலும் தடுக்க முடியாது. ஸ்டாலின் நடத்தி வரும் நல்லாட்சியையும், நல்ல திட்டங்களையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டும். அதற்கு அத்தனை பேரும் உதவ வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசு பழிவாங்குதல் நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகத்தின் நிதி உள்பட உரிமைகள் பறிக்கப்பட்டால் தி.மு.கவின் போர் குணம் வெளிப்படும்" என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“