சென்னையிலுள்ள மேக்ஸ் கால்பந்து அகாடமியில் இன்பன் உதயநிதி பயிற்சி பெற்று வருகிறார். இவர் டிபெண்டர் ரோலில் பயிற்சி செய்கிறார். தற்போது இவரை அகாடமியிலிருந்து நேரடியாக ஒரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியளவில் பிரபலமான ஐ லீக் தொடர் 2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் 21 கிளப் பணிகள் கலந்துகொள்கின்றன.
இந்தாண்டுக்கான தொடர் ஆரம்பமாகவிருப்பதால் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளில் கிளப் அணிகளின் நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற கால்பந்து அணி இன்பன் உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் நெரோகா அணி பதிவிட்டுள்ளது. நெரோகா அணியின் வீரர்கள் தேர்விற்கான ட்ரையல்ஸில் இன்பன் உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள முன்னணி அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் விளையாட்டுகளில் முத்திரை பதிப்பது முதல்முறை அல்ல. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஜார்க்கண்ட் கிரிக்கெட் அணியிலும் டெல்லி டேர்டெவில்ஸ் 20-20 கிரிக்கெட் அணியிலும் விளையாடியிருக்கிறார்.
இன்பன் இதுபற்றி கூறுகையில், நான் ஒரு கால்பந்து வீரராக இருக்க விரும்புகிறேன். எனது இந்த முடிவுக்கு குடும்பத்தினர் மிகுந்த ஒத்துழைப்பு மற்றும் ஆதரவளிக்கின்றனர். இந்த வாய்ப்பு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாத்தாவுடன்(மு.க.ஸ்டாலின்) எனது கால்பந்து விருப்பங்களைப் பற்றி விவாதிக்கவில்லை.அவரின் வேலையின் காரணமாக வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே சந்திக்க முடிகிறது. விளையாட்டை பற்றி அதிகமாக பேசியதில்லை. கண்டிப்பாக எனது கால்பந்து வீரர் முடிவுக்கு அவர் ஆதரவு தருவார்" என்கிறார்.
இன்பனுக்கு விளையாட்டு மீதான ஆர்வம் 5ஆம் வகுப்பு படிக்கும்போது வந்துள்ளது. அவரது அப்போதைய பள்ளியில் கிரிக்கெட்டுக்கு ஏற்ற மைதானம் இல்லாததால், கால்பந்து விளையாடத் தொடங்கினார். விளையாடி முடித்து வீடு திரும்பிய பிறகு டிவியில் கால்பந்து போட்டிகளை பார்த்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மூன்று தொடர்ச்சியான சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்ற ரியல் மாட்ரிட் ஆகியோர் இன்பன் மனதில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தினர்.
இன்பனுக்கு ஐ லீக் மற்றும் ஐஎஸ்எல் பற்றி அதிகம் தெரியாது. சமீபத்தில் தான் டேவிட் ஆனந்தின் கால்பந்து பிளஸ் அகாடமியில் தன்னை சேர்த்துக் கொண்டார். தொற்றுநோய் முடிந்தவுடன் ரியல் மாட்ரிட்டின் ஒரு நிகழ்ச்சியில் பயிற்சி பெற இன்பன் திட்டமிட்டுள்ளார். இப்போதைக்கு, இன்பன் நெரோகாவுக்காக விளையாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.