scorecardresearch

விளையாட்டுத் துறை கோரிக்கைகளுக்கு என்னை எப்போதும் தொடர்பு கொள்ளலாம்: கோவையில் உதயநிதி உறுதி

கோவையில் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; எல்லோருக்கும் எல்லாம் சென்று சேர வேண்டும் என்பது தான் திராவிட ஆட்சி என பேச்சு

விளையாட்டுத் துறை கோரிக்கைகளுக்கு என்னை எப்போதும் தொடர்பு கொள்ளலாம்: கோவையில் உதயநிதி உறுதி

கோவை கொடிசியா மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 20 துறைகளின் சார்பில் சுமார் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.

இதையும் படியுங்கள்: கோவையில் உதயநிதி: வரவேற்க குவிந்த தி.மு.க-வினர்

முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, ராஜராஜசோழன் ராஜேந்திர சோழனை பெற்று சான்றோனாக்கினார். அதுபோல் சின்னவரை பெற்று சான்றோனாக்கியுள்ளார் தளபதி.

கடந்த ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சியை விட தமிழகம் இந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பு வளர்ச்சி பெறும், அன்னூர் தொழிற்பூங்கா அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஆனால் விவசாய நிலங்களை எடுக்காமல் அங்குள்ள கார்ப்பரேட் நிலங்களை மட்டுமே எடுப்போம், என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பத்து பேரும் வரவில்லை என்றாலும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தென்னிந்திய மான்செஸ்டரான கோவை உழைப்பால் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ளது.

கோவைக்கு எத்தனையோ முறை வந்தாலும் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு முதல் சுற்று பயணம், இன்று கிறிஸ்துமஸ் திருநாளில் கோவையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

இன்றைய விழாவில் 25042 பயனாளிகளுக்கு 368 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக அரசு நிர்வாகம் செயலற்று கிடந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவைக்கு பொறுப்பு அமைச்சராக முதல்வர் கொடுத்துள்ளார்.

கோவை மக்கள் தங்கள் ஊரில் அமைச்சர் இல்லையே என நினைத்திருப்பார்கள், ஆனால் அவரது செயல்பாடுகளை பார்த்து அவரை கோவை செந்தில்பாலாஜி என நினைக்க தொடங்கியுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மாதம் ஒரு முறை கோவைக்கு வருவேன் என வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் இதுவரை ஆறு ஏழு முறை கோவைக்கு வந்துள்ளேன்.

இதுவரை 157575 மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. 24 மணி நேரம் கட்டுப்பாடு அறையை திறந்து கோவை மக்களின் குறைகளை தீர்த்து வருகிறார்.

மின் நுகவோர் சேவை மையமான மின்னகம் மூலம் 1337679 மனுக்கள் பெறப்பட்டு அதில் 1329565 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மின்னகம் மூலம் 100 சதவீதம் தீர்வு பெறப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகள் அ.தி.மு.க ஆட்சியில் 2.20 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதியில் ஒரு தி.மு.க எம்.எல்.ஏ இல்லை என நினைத்திருந்தோம். ஆனால் அவை பொய் என சொல்லும் அளவிற்கு நிரூபித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

230 கோடி மதிப்பீட்டில் 1115 முடிவுற்ற பணிகள் துவக்கம்,, 800 கோடி 5946 புதிய பணிகளுக்கு அடிக்கல், 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே அதிக நலத்திட்டங்களை பெற்ற மாவட்டமாக கோவை திகழ்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு துறை வாரியாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பட்டியலிட்ட உதயநிதி ஸ்டாலின், எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.

அ.தி.மு.க.,காராக இருக்கலாம் பா.ஜ.க.,காராக இருக்கலாம். பா.ஜ.க.,வில் வாட்ஸ் ஆப் மூலம் பொய் செய்தியை பரப்புபவராக கூட இருக்கலாம் அவர்களுக்கும் எல்லாம் சென்று சேர வேண்டும் என்பது தான் திராவிட ஆட்சி.

முதல்வரையும் திராவிட மாடல் ஆட்சியையும் மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். விளையாட்டு துறை கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

கலைஞர் பேரன், முதல்வரின் மகன், மாண்புமிகு அமைச்சர் என எவ்வளவோ பெருமைகள் இருந்தாலும் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை என்பது தான் எனக்கு பெருமை. உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையை விட பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருப்பேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Udhayanidhi stalin speech highlights at kovai function