சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 14) தமிழக அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.
அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு தி.முக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் நடைபெற்றது. 9.30 மணியளவில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மூவரும் நிகழ்ச்சி அரங்கிற்கு ஒன்றாக வருகை தந்தனர். தொடர்ந்து, எம்.எல்.ஏ உதயநிதிக்கு ஆளுநர் ரவி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
'உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்' எனக் கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். முதல்வரும், தந்தையுமான மு.க ஸ்டாலினிடம் மேடையில் ஆசி பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஆளுநர், முதல்வர், அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பதற்கு முன் முதல்வரும், தந்தையுமான ஸ்டாலினை இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி பதவியேற்பு விழாவை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு ‘உதயநிதியை வரவேற்போம்’ என்ற வாசகம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. உதயநிதி பதவியேற்பு நிகழ்ச்சியில்
அவரது குடும்பத்தினர் துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, சபரீசன் உள்பட எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பதவி வழங்கியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், இதை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றுவேன் என்றும் ட்விட்டரில் உதயநிதி பதிவிட்டுள்ளார். உதயநிதி அமைச்சராக பதவியேற்றதை தி.மு.கவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/