பாட்னாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பற்றி, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ஆங்கிலத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலத்திலேயே பதிலளித்தார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்புடன் பா.ஜ.க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரம், பா.ஜ.க.,வை தேர்தலில் வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற குரல்களும் கேட்டு வருகின்றன. அதிலும், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் தான் பா.ஜ.க.,வுக்கு கடும் நெருக்கடி தர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: நட்டாற்றில் தத்தளித்த அ.தி.மு.க-வை நங்கூரம் இட்டு காத்தது பா.ஜ.க: செல்லூர் ராஜுக்கு நாராயணன் திருப்பதி பதிலடி
இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதுமுள்ள எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க உட்பட சுமார் 15 கட்சிகள் பங்கேற்கும் என தெரிகிறது. தி.மு.க சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாட்னா சென்று இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், தி.மு.க இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம், முன்னணி ஆங்கில ஊடகமான ANI சார்பில் பாட்னா கூட்டம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆங்கிலத்தில் ஏ.என்.ஐ செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஆங்கிலத்திலேயே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது, "பா.ஜ.க.,வை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும்ம் பாட்னா கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பங்கேற்பு மிக முக்கியமானதாக இருக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் இதைப் பற்றி விளக்குவார்," என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil