”மேடையில் இருப்பதைவிட தொண்டர்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன்”: உதயநிதி பேச்சு

மேடையில் இருப்பதைவிட தொண்டர்களில் ஒருவனாகவே இருக்க விரும்புவதாக, நடிகரும் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேடையில் இருப்பதைவிட தொண்டர்களில் ஒருவனாகவே இருக்க விரும்புவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சென்னை தாம்பரத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகரும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர், பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “மேடையில் இருப்பதைவிட உங்களில் (தொண்டர்கள்) ஒருவனாக இருக்கவே விரும்புகிறேன். இனி அடிக்கடி இம்மாதிரியான (போராட்டம்) மேடைகளில் பார்க்கலாம்”, என கூறினார்.

சமீபத்தில், திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவொன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “முடிவெடுத்துவிட்டே மேடை ஏறுகிறேன். நான் நடிகனாக இங்கு வரவில்லை. நான் அடிப்படையிலேயே திமுக தொண்டன்”, என கூறினார்.

இதன்மூலம், உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் இறங்க உள்ளார் என தகவல் வெளியானது. மேலும், திமுக மாவட்ட செயலாளரும், சென்னை மாநகர முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன், “உதயநிதி ஸ்டாலின் கருவிலேயே அரசியலுக்கு வந்தவர். மு.க.ஸ்டாலினுக்காக குழந்தையாக இருக்கும்போதே உதயசூரியனுக்காக ஓட்டு கேட்டவர்.”, என கூறினார். மேலும், “எதிரிகளை வீழ்த்திட வீரவாள் பரிசளிக்கிறேன்”, எனக்கூறி வெள்ளி வாள் ஒன்றை பரிசளித்தார்.

×Close
×Close