Advertisment

பா.ஜ.க-வுடன் கூட்டணியா? உதயநிதி பேட்டியில் மீடியாவிடம் சீறிய கே.என் நேரு

மிசாவும், தற்போதைய ஐ.டி ரெய்டும் ஒன்றுதான்; நாங்க ஏன் பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைக்கணும்? - திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

author-image
WebDesk
New Update
Udhay

திருச்சி புகைப்பட கண்காட்சியில் உதயநிதி ஸ்டாலின்

திருச்சி மாவட்ட தி.மு.க சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திருச்சி செயிண்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் புகைப்படக் கண்காட்சியை திரைப்பட நடிகர்கள், அரசியல்வாதிகள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட பொதுமக்கள் பலரும் பார்த்து, செல்பி எடுத்து மகிழ்ந்து வந்தனர். இந்தப் புகைப்பட கண்காட்சியின் நிறைவு நாளான இன்று, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டனர்.

Advertisment
publive-image

அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "இந்த புகைப்பட கண்காட்சியை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கிறது. உழைப்பு என்றால் ஸ்டாலின் என கருணாநிதி கூறியுள்ளார். அதனை எடுத்துக்காட்டும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. சட்டமன்றத்தில் விளையாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஏற்கனவே சில பணிகள் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு அறிவிப்பாக கண்டிப்பாக நிறைவேற்றப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: கிளாம்பாக்கம் பஸ் நிலையம்- ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலம்: பணிகளை வேகப்படுத்த உத்தரவு

மிசாவிற்கும், தற்போது நடைபெறும் பா.ஜ.க.,வின் வருமான வரி சோதனைக்கும், எந்த வித்தியாசமும் இல்லை. எந்த சவாலையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

publive-image

மிசாவும், தற்போதைய ஐ.டி ரெய்டும் ஒன்றுதான் என உதயநிதி கூறியதையடுத்து, பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைப்போம் என்பதைத்தான் மறைமுகமாகச் சொல்கிறீர்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்வியால் புருவம் உயர்த்தி யோசித்த உதயநிதி ஸ்டாலின், "நாங்க ஏன் பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைக்கணும்? பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்திருப்பது பத்திரிகையாளர்களாகிய நீங்கதான். நாங்க கிடையாது" என சிரித்தபடியே கூறினார். ஆனால், அருகில் இருந்த அமைச்சர் கே.என்.நேரு டென்ஷன் ஆகி, "யாரு நீங்க.. என்னா தம்பி, என்ன கேள்வி கேட்குற, கேள்விய கரெக்டா கேளுய்யா, இதுமாதிரி எல்லாம் பேசாம நல்ல கேள்வியா கேளுய்யா" எனச் சீறினார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், "சரி.. பரவால்லணே.. பரவால்லணே.." என கூல் செய்தார்.

publive-image

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகும் நிலையில் உங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறதே உண்மையா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், யார் சொன்னது? யார் தகவல் கொடுத்தது எனக் கேட்டார். அதற்கு அந்த செய்தியாளர் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறதே எனக் கூற, "நீங்க தாங்க சமூக வலைதளம்" எனச் சிரித்தபடியே கூறிவிட்டுக் கிளம்பினார்.

அமைச்சர் உதயநிதியின் வருகையை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சியில் தி.மு.க முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என பெரும்பாலானோர் திரண்டதால் கண்காட்சி நுழைவு வாயிலில் எம்.எல்.ஏ.க்களே நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. பாதுகாப்புக்காக அங்கே குவிக்கப்பட்டிருந்த பவுண்சர்ஸ்க்கும் லோக்கல் பிரமுகர்களுக்குமிடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது நுழைவு வாயிலின் கண்ணாடிக்கதவுகள் தெறித்து சிதறின. இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

publive-image

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, கதிரவன், ஸ்டாலின் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Dmk Udhayanidhi Stalin Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment