தி.மு.க இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பெயரில் உள்ள அறக்கட்டளையினர் புரட்டாசி 3-வது சனிக்கிழமை நாளில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியது கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்துகிற சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கொசு, டெங்கு, காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதனத்தை ஒப்பிட்டு சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பா.ஜ.க மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடியும் உதயநிதி ஸ்டாலின் பேச்சை விமர்சனம் செய்தார்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ. 10 கோடி பரிசு என்பது உள்ளிட்ட கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.
சனாதன ஒழிப்பு குறித்த பேச்சுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உதயநிதியின் பேச்சு இந்து மதத்திற்கு எதிரானதாக பா.ஜ.க-வினர் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சனாதன தர்மம் ஒழிப்பில் உறுதியாக இருக்கிறோம் என்றனர்.
இந்த சூழ்நிலையில், புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை நாளில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ-வாக உள்ள தொகுதியான திருவல்லிக்கேணியில் உள்ள புகழ்பெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பிரசாதம் வழங்கும் பணியை அவருடைய பெயரிலான உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை" மேற்கொண்டு வருகிறது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்குப் பக்தர்கள் பெரிய அளவில் வருகை தருவது வழக்கம். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான நேற்று (அக்டோபர் 07) தரிசனம் செய்த பக்தர்களுக்குச் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை சாதம், தயிர் சாதம் போன்ற பிரசாதங்கள் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டன.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் காலை நடை திறந்ததில் தொடங்கி நள்ளிரவு நடை சாத்தும் வரை நாள் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்குப் பிரசாதம் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் நிர்வாகி பி.கே.பாபு, அவருடன் ராஜ்குமார், நரேஷ், பிரகாஷ், ஆனந்தன், மணிகண்டன், ஸ்ரீ கணேஷ் உள்ளிட்டோர் பக்தர்களுக்குப் பிரசாதங்களை வழங்கினர்.
உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை புரட்டாசி மாதம் சனிக்கிழமை நாளில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரசாதம் வழங்கியது சனாதனம் வேறு, ஆன்மீகம் வேறு என்று உதயநிதி தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“