கன்னியாகுமரி சென்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சுவாமிதோப்பில் உள்ள அய்யா வைகொண்டர் தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் அரசு விருந்தினர் மாளிகை சென்றபோது, அவரை வரவேற்பதில் தி.மு.க-வினர் இடையே மோதல் ஏற்பட்டது.
தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் கட்சி நிகழ்ச்சிகளுக்காக திங்கள்கிழமை கன்னியாகுமரி சென்றார்.
கன்னியாகுமரி வந்த உதயநிதி ஸ்டாலின், தி.மு.க-வில் இணைய விருப்பமுள்ள இளைஞர்களை, வீடுவீடாக சென்று தி.மு.க இளைஞர் அணியில் சேர்க்கும் ‘இல்லந்தோறும் இளைஞரணி’ முன்னெடுப்பை கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், கன்னியாகுமரி பேரூர், அலங்காரமாதா சர்ச் தெருவில் தொடங்கிவைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மாவட்ட தலைவர் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில்,வெள்ளியாவிளை சேர்ந்த ஸ்டான்லி என்பவரின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ.1லட்சம் நிதி உதவியும், ஹபீர் என்பவருக்கு செயற்கை கால்களையும் நலத்திட்டமாக வழங்கினார்.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் சுவாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப் பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து, கட்சி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு உதயநிதி கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்க சென்றார். அப்போது அவரை வரவேற்பதில் தி.மு.கவினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்கள் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், உதயநிதி ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகைக்கு உள்ளே சென்றதும் தி.மு.க-வின் ஒரு பிரிவினர் கதவை அடைத்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த மற்றொரு பிரிவினர் கதவைத் திறந்து உள்ளே சென்றனர். இதனால், தி.மு.க.-வினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் முன்பாகவே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர் இதனால், அங்கே பரபரப்பு நிலவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“