தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை அமைச்சராக பதவியேற்கிறார். அவருக்கு கோட்டையில் 2வது மாடியில் அறை தயாராகி வருகிறது. அமைச்சராகும் உதயநிதிக்கு பிரபலங்கள் பலரும் முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கேட்கப்பட்டு வந்த கேள்வியான, உதயநிதி எப்போது அமைச்சராவார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் நேரம் வந்துவிட்டது. தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி, முதலில் சினிமாவில் அறிமுகமானார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் விநியோகம் செய்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க இளைஞரணி செயலாளராக அரசியலில் நுழைந்தார். சினிமா துறையில் மிகவும் பிசியாக இருந்தாலும் அதைவிட அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தி.மு.க இளைஞரணி செயலாளர் என்ற முறையில் இளைஞரணியை வலுப்படுத்தி வருகிறார்.
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், அப்போதே, மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்ப்புகளும் ஊகங்களும் எழுந்தன. தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, இந்த ஒன்றரை ஆண்டுகளில், உதயநிதி அமைச்சராகப் போகிறார் என்ற ஊகச் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்துள்ளனர்.
தி.மு.க அமைச்சர்கள், கே.என். நேரு, எ.வ. வேலு, பி.கே. சேகர் பாபு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் என பலரும் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படையாகவே தெரிவித்து வந்துள்ளனர். ஆனாலும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி தொடர்ந்து வந்தது.
அண்மையில், இது குறித்து செய்தியாளர்கள் உதயநிதியிடம் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதலமைச்சர்தான் முடிவு செய்வார் என்று கூறினார்.
இந்த சூழ்நிலையில்தான், உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, உதயநிதி விரைவில் அமைச்சராகிறார் என்று உறுதி செய்தார்.
உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி புதன்கிழமை விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்கிறார் என்றும் அவருக்கு கோட்டையில் 2வது மாடியில் அறை தயாராகி வருகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதி அமைச்சராக உள்ளதால் அவருடைய ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும், விளையாட்டுத் துறை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்கும் உதயநிதிக்கு பிரபலங்கள் பலரும் முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.