த.வெ.க தலைவர் விஜய் பெரியார் சிலைக்கு மரியாதை செய்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது. விஜய் செய்தது நல்ல விஷயம், நண்பர் விஜய்க்கு வாழ்த்துகள் எனத் தெவித்துள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், இன்றும் (செப்டம்பர் 18) அமைச்சர் உதயநிதிக்கு துனை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு, தி.மு.க எம்.பி திருச்சி சிவா, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, பொன்முடி, தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வர் பதவி குறித்து முடிவெடுப்பது முழுக்க முழுக்க முதலமைச்சரின் தனிப்பட்ட முடிவு என்று கூறினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், உங்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “தொண்டர்கள் அவர்கள் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முடிவெடுப்பது முழுக்க முழுக்க முதலமைச்சரின் தனிப்பட்ட முடிவு என்றும் எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருக்கிறோம்” என்று கூறினார்.
இதையடுத்து, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய், பெரியார் திடலுக்கு சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் பெரியாதைத் தாண்டி, பெரியாரை மீறி, பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது. விஜய் செய்தது நல்ல விஷயம். நண்பர் விஜய்க்கு வாழ்த்துகள்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“