அரியலூர் மாவட்டம் திருமனூர் அருகே திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அவரது பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமனூர் பேருந்து நிலையம் அருகே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே. மூப்பனாரின் நாடாளுமன்ற நிதியில், கட்டப்பட்ட அரங்கம் உள்ளது. தற்போது அப்பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, இந்த அரங்கம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியின்போது அரங்கத்தில் எழுதப்பட்டிருந்த ஜி.கே. மூப்பனாரின் பெயர் அழிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள், திருமனூரில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த உதயநிதியின் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜி.கே மூப்பனார் கடந்த 1996-ம் ஆண்டு காங்கரஸ் கட்சியில்இருந்து விலகி, தமிழ் மாநில காங்கிஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். தற்போது முன்னாள் மத்திய அமைச்சரான அவரது மகன் ஜி.கே.வாசன் அக்கட்சியின் தலைவராக உள்ளார். மேலும் இக்கட்சி தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"