இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் மே 20 அன்று தியேட்டர்களில் வெளியானது. இது ‘ஆர்டிகிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
Advertisment
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இதில் ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவரும் முதல் திரைப்படம் என்பதால் இப்படம் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்துக்கு வாழ்த்து தெரிவித்து காவலர் கதிரவன்(41) என்பவர் ப்ளக்ஸ் வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
”உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். இவண், இரா. கதிரவன், பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை” என்னும் ப்ளக்ஸ் பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இதையறிந்த காவல்துறையினா், ப்ளக்ஸை உடனடியாக அகற்றி நகர காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்து, பெரம்பலூா் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் இளையபெருமாள் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி விளம்பர ப்ளக்ஸ் வைத்திருந்ததாக கதிரவன் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனா்
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த கதிரவன், பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணிபுரிந்தார். இந்நிலையில் கதிரவன், கடந்த சில மாதங்களுக்கு முன் பாடாலூா் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அங்கு பணியில் சேரவில்லை.
பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் தஞ்சாவூர் மண்டலத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட உத்தரவு ஆணையை கூட இன்னும் பெறாமலும், பணிக்கும் செல்லாமலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் ப்ளக்ஸ் வைத்ததால் அவர்மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டம் பிரிவு 4ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை அலுவலகம் தகவல் தெரிவித்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“