ஒரே இடத்தில் 2 ஆயிரத்திற்கும் மேலான பறவைகள்... திருச்சியில் மேலும் சுற்றுலா தலத்தை திறந்து வைத்த உதயநி

ஒரே இடத்தில் 2 ஆயிரத்திற்கும் மேலான பறவைகள் இருக்கும் வகையில் திருச்சியில் மேலும் ஒரு சுற்றுலாத் தலத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

author-image
WebDesk
New Update
 உதயநிதி

திருச்சியில் புதிய சுற்றுலா தலம்

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டையில் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை சார்பில் பறவைகள் பூங்காவை திறந்து வைத்து உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். இது குறித்த விபரம் வருமாறு;

Advertisment

திருச்சி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலும், திருச்சி மக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுப்போக்கும் வகையிலும் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை கம்பரசம்பேட்டையில் அய்யாளம்மன் படித்துறை அருகே பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பறவைகள் பூங்கா திருச்சி மாநகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.18.63 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பிப்ரவை 9 மாலை நடைபெற்றது. 

இந்த நிகழ்வுக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

இதைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர், அய்யாளம்மன் படித்துறை பகுதிக்கு சென்று பறவைகள் பூங்காவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட்ட உதயநிதி மீது சில பறவைகள் கைகளில் வந்து அமர்ந்தன. அதனை ரசித்தவாறு உதயநிதி பூங்காவின் பிற பகுதிகளையும் பார்வையிட்டார். இந்தப் பூங்காவில் செயற்கையான அருவிகள் போன்ற அமைப்பும் உள்ளது.

இந்த பூங்காவில் அரிய வகையிலான பறவைகள் வளர்க்கப்படுகின்றன. இதுமட்டு மல்லாமல் குழந்தைகள் தெரிந்து கொள்ள 5 வகையான நிலங்கள் அதாவது குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் மற்றும் பாலை போன்ற அமைப்புகளும் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது.

இதனை குழந்தைகளுக்கு புரியும் வகையில், மலைகள், காடுகள், கடற்கரை, சமவெளி மற்றும் பாலை வனம் போன்ற இடங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக மினி தியேட்டர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 50 பேர் உட்காரும் வகையில் அறிவியல் பூர்வ படங்கள் திரையிடப்படும். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த பறவைகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பூங்காவானது கம்பரசம்பேட்டையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து இருப்பதால் மக்கள் எளிதில் இந்த பறவைகள் பூங்காவிற்கு வருவதற்கு போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தர பாண்டியன், அப்துல் சமது மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கார் மூலம் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் மகன் கணேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க புதுக்கோட்டை சென்றார்.
முன்னதாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் எம். பிரதீப் குமார் கூறுகையில், "நாங்கள் திருச்சியில் இந்தியாவின் மிகப்பெரிய பறவைக் கூடத்தைத் திறந்துள்ளோம்.

 இங்கு 40-60 இனங்களைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. குழந்தைகளுக்கான மீன் ஸ்பா, குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, மீன்வளம் மற்றும் பிற விஷயங்கள் போன்ற பல செயல்பாடுகளை நாங்கள் இங்கு வைத்திருக்கிறோம் எனக் கூறினார்.
க.சண்முகவடிவேல்

Udhayanidhi Stalin Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: