தமிழகத்தில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இருந்து கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக, இயல்பை விட கூடுதலாக நவம்பர் மாதம் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், மழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தகவல் அளித்தார்.
அதன்படி, "அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக சென்னையில் 3.60 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென் சென்னையில் சராசரியாக 5.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பெருங்குடியில் அதிகபட்சமாக 7.35 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும், செங்கல்பட்டில் 1.60 செ.மீ மழையும், திருவள்ளூரில் 0.6 செ.மீ மழையும், காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இதேபோல், சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
முதலமைச்சரின் கட்டளையின் படி கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தோம். 1194 மோட்டார் பம்புகள், 150 நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அக்டோபர் மாதத்தை விட தற்போது அதிகளவிலான மோட்டார் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
மாநகராட்சி சார்பில் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 120 உணவு தயாரிப்பு கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.
இதன் எண்ணிக்கை கடந்த அக்டோபர் மாதத்தில் 98 ஆக இருந்தது.
சென்னையில் உள்ள 22 சுரங்க பாதைகளில் கணேசபுரம் சுரங்கபாதையை தவிர மற்ற அனைத்திலும் இயல்பான போக்குவரத்து உள்ளது. கணேசபுரம் சுரங்கபாதையில் ரயில்வே நிர்வாக பணிகள் நடைபெறுவதால் மூடி வைக்கப்பட்டுள்ளது. காலை 9:30 மணி வரை எந்த பகுதியிலும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை.
சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி குழுவினர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் உள்ளிட்ட அனைவரும் களத்தில் இருக்கிறோம். மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும், ஊடகத்தினரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“