Advertisment

உதயநிதியின் சனாதானம் கருத்து, அரசியல் ஆதாயங்களுக்காக திரித்துக் கூறுவது தவறு- கமல்ஹாசன்

சனாதனம் பற்றி கருத்துச் சொல்ல உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
Sep 08, 2023 08:35 IST
Udhayanithi Stalin Sanatana Controversy

Udhayanithi Stalin Sanatana Controversy

சனாதனத்துக்கு எதிராக உதயநிதி தெரிவித்த கருத்துக்களுக்கு பா.ஜ.க. கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும், டெல்லி, பீகார், உ.பி. உட்பட பல மாநிலங்களில் உதயநிதி மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த சம்பவங்களால் அமைச்சர் உதயநிதியின் வீட்டிலும், அலுவலகத்திலும் போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சனாதன சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த உதயநிதி, ’தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.

நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும்.

ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்என்று விட்டுவிட்டேன்.

மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல்… போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது, என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் உதயநிதியின் கருத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் சத்யராஜ் இயக்குனர்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் என பல அரசியல்வாதிகளும், சினிமா பிரலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் சனாதனம் பற்றி கருத்துச் சொல்ல உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒரு கருத்துக்கு குடிமக்கள் உடன்படாமல் போவதும் , தொடர்ந்து விவாதத்தில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் தான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம். சரியான கேள்விகளைக் கேட்பது முக்கியமான பதில்களுக்கு வழிவகுத்தது மற்றும் சிறந்த சமூகமாக நமது வளர்ச்சிக்கு பங்களித்தது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குக் கற்பித்துள்ளது.

சனாதனம் பற்றி கருத்துச் சொல்ல உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு, அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், அவருடன் விவாதத்தில் ஈடுபடலாம், ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக திரித்துக் கூறுவது தவறு.

ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது, அது தொடர்ந்தும் இருக்கும். சமத்துவம் மற்றும் முன்னேற்றத்தை உறுதிசெய்து, நமது மரபுகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமானது. இணக்கமான மற்றும் உள்ளடக்கிய சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான விவாதங்களை ஏற்றுக்கொள்வோம்’, இவ்வாறு கமல்ஹாசன் அதில் தெரிவித்துள்ளார்.

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment