சென்னை ஒரு குழந்தை எனவும், அதன் தாய்மார்களாக விளங்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெய்த கனமழையின் போது களப்பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரை கௌரவித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டில் சுமார் ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை 24 மணி நேரத்தில் பெய்ததால், சென்னை மிகுந்த பாதிப்புக்குள்ளானதாக கூறியிருந்தார். அதன்பின்னர், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி ஆய்வுக் கூட்டம் நடத்தியதாகவும், குறிப்பாக எவ்வளவு மழை பெய்தாலும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நீர் தேங்கி நிற்காத அளவிற்கு பணியாற்ற வேண்டுமென உத்தரவிட்டதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
அதன் விளைவாக, களப்பணியாளர்களுடன் சேர்ந்து பணியாற்றியதால் இந்த முறை பெருமளவு பாதிப்பு ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களுக்கு துணையாக அரசும், அரசுக்கு துணையாக மக்களும் இருப்பதால் தான் இது சாத்தியமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது, சென்னையை ஒரு குழந்தை எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின், அதன் தாய்மார்களாக தூய்மை பணியாளர்கள் விளங்குவதாக தெரிவித்தார். "ஒரு குழந்தையை அதன் தாயார் காலையில் குளிப்பாட்டி விட்ட பின்னர், அக்குழந்தை நாள் முழுவதும் விளையாடி விட்டு மீண்டும் வீட்டிற்கு வரும் போது மண், தூசுகளுடன் காணப்படும். அக்குழந்தையை பார்க்கும் போது அதன் அம்மாவுக்கு செல்லக் கோபம் வரும்" எனக் கூறிய அவர், சென்னையும் அது போல் தான் எனத் தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களின் பங்கு இல்லாமல் இவ்வளவு விரைவாக பணிகள் நடைபெற்று இருக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“