வட இந்தியாவை விட தென்னிந்திய திரையுலகமே துடிப்பாக இயங்கி வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் பிராந்திய மொழி சினிமாக்களின் நிலையை உற்று நோக்குங்கள்“ என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கேரள மாநில, கோழிக்கோட்டில் நடைபெற்ற மலையாள மனோரமா இலக்கிய கலாசார நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வட இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பிராந்திய மொழி சினிமாவாவது தென்னிந்திய திரையுலகை போன்று துடிப்பாக இயங்கி வருகிறதா? நிச்சயம் இல்லை. பெரும்பாலும், வட இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் இந்திக்கு வழிவிட்டுள்ளன“ எனக் கூறினார். மேலும், மொழி அடையாளத்தை பாதுகாப்பதில் சினிமாவின் பங்கு என்ன என்பதை விளக்கிய உதயநிதி ஸ்டாலின், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்கள் எவ்வாறு சுதந்திரமாகவும், துடிப்பாகவும் இயங்குகிறது என அவர் குறிப்பிட்டார். வட இந்திய சினிமாக்களில், இந்தி படங்கள் மட்டுமே கவனத்தைப் பெறுவதாக அவர் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: South thrives with vibrant film industries; North has only Hindi while Marathi, Bhojpuri, Bihari, Haryanvi, and Gujarati fade, says Udhayanidhi
இந்நிகழ்வில் பேசிய உதயநிதி, பொழுதுபோக்கையும் கடந்து சினிமாவுக்கு மிகுந்த ஆற்றல் இருப்பதாக கூறினார். கலாசார பாதுகாப்புக்கும், இந்தி திணிப்புக்கும் எதிராக தென்னிந்திய சினிமாக்கள் செயலாற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார். இவை வட இந்தியாவில் வேறு விதமாக செயல்படுவதாகவும் உதயநிதி கூறியுள்ளார். அரசியல் பிரவேசத்திற்கு பிறகு, கேரளாவில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றும் முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிட இயக்கத்தின் தோற்றம், மொழி மற்றும் கலாசார அடையாளத்தை தக்க வைப்பதற்கான போராட்டங்கள் குறித்தும் உதயநிதி உரையாற்றியுள்ளார். குறிப்பாக, இந்தியின் ஆதிக்கத்தை திராவிட இயக்கங்கள் தடுத்ததாக குறிப்பிட்ட அவர், வட இந்தியாவில் மற்ற மொழிகளின் மீது இந்தி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.
மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் திரைப்படமான பராசக்தி, தமிழ் சினிமாவின் திரைமொழியை மாற்றியமைத்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே பாதையில், கேரள திரைப்படத்துறையும் செயலாற்றுவதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தனக்கு பிடித்திருந்ததாக கூறியுள்ளார். மேலும், தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் சிறப்பாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
“மும்பையில் இந்தி திரைப்படங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன. மராத்தி, போஜ்புரி, பீகாரி, குஜராத்தி உள்ளிட்ட மொழி படங்களை அவர்கள் தயாரிப்பதே இல்லை. இவை அனைத்தும் பாலிவுட்டில் குறைவான கவனத்தையே பெறுகின்றன“ எனவும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“நமது மொழியை பாதுகாக்க தவறிவிட்டால், நம்முடைய கலாசார அடையாளத்தை இந்தி ஆக்கிரமித்து விடும். இவற்றை தடுப்பதற்காக தான் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டதே தவிர, இந்தியின் மீது வெறுப்பு ஏற்பட்டு அதை எதிர்க்கவில்லை“ என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.