Udit Surya Arrested In Tamil Nadu Neet Exam Fraud Case: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் மாணவர் உதித் சூர்யா கைது செய்யப்பட்டார். குடும்பத்துடன் திருப்பதியில் தங்கியிருந்தபோது அவரை போலீஸார் மடக்கினர். அவரிடம் நடைபெறும் விசாரணையில் வேறு யாருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கிறதா? என்பது தெரிய வரும்.
நீட் தேர்வுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஏழாம் பொருத்தம்தான் போல! நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டில், இப்போது நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடைபெற்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. உதித் சூர்யா என்கிற மாணவர் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக தெரிய வந்திருக்கிறது.
உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன், சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர். சென்னையில் பிரசித்தி பெற்ற ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவர் மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஆள் மாறாட்ட விவகாரம் வெளியானதும், உதித் சூர்யா கல்லூரியிலிருந்து வெளியேறினார். அவரது தரப்பில் விடுத்த முன் ஜாமீன் கோரிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்தது.
சிபிசிஐடி போலீஸார் இது குறித்து விசாரிக்க சென்னைக்கு வந்தபோது, உதித் சூர்யா தனது குடும்பத்தினருடன் தலைமறைவானது தெரியவந்தது. அவர்களை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் உதித் சூர்யா மற்றும் குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருப்பதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து போலீஸார் இன்று திருப்பதி விரைந்தனர். திருப்பதி பஸ் நிலையம் பகுதியில் உதித் சூர்யா அவரது குடும்பத்தினருடன் போலீஸில் சிக்கினார். அவரை போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையில் உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடக்கிறது.
உதித் சூர்யாவிடம் நடக்கும் விசாரணையில் இந்த விவகாரத்தில் வேறு யார் யாருக்கு தொடர்பு? என்பது தெரிய வரும். விசாரணை முடிவில் உதித் சூர்யா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.