New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/06/2jiwal-2025-08-06-16-09-57.jpg)
எஸ்.எஸ்.ஐ. வெட்டி படுகொலை சம்பவம்: உடுமலை விரைகிறார் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்ஐ சண்முகவேலை வெட்டிக் கொலை செய்ததாக மூர்த்தி, அவரது மகன் தங்கபாண்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.எஸ்.ஐ. வெட்டி படுகொலை சம்பவம்: உடுமலை விரைகிறார் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்
திருப்பூர் மாவட்டம், உடுமலைக்கு அருகே உள்ள குடிமங்கலத்தில், சிக்கனூத்து கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி (60) அவரது மகன்கள் தங்கபாண்டியன் (32), மணிகண்டன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். நேற்றிரவு மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது தந்தை மூர்த்தியை கடுமையாகத் தாக்கினார்.
இந்தச் சண்டையை கண்ட மற்ற தொழிலாளர்கள் குடிமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். தகவலின்பேரில், சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) சண்முகவேல் மற்றும் ஆயுதப்படை காவலர் அழகு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போதையில் இருந்த மூவரையும் சமாதானப்படுத்த முயன்றபோது, மூவரும் போலீசாரை ஆயுதங்களால் தாக்கத் தொடங்கினர்.
இதில், சண்முகவேல் மற்றும் காவலர் அழகு ஆகிய இருவரும் ஆயுதங்கள் இன்றி இருந்ததால், தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது, மணிகண்டன் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை ஓடஓட விரட்டி, அரிவாளால் கடுமையாக வெட்டினார். இதில் நெற்றியிலும், கழுத்திலும் பலத்த காயம் அடைந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர் அழகு, அங்கிருந்து தப்பிச் சென்று குடிமங்கலம் காவல் நிலையத்தில் நடந்ததைக் கூறினார். இதற்கிடையில், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மணிகண்டனின் மனைவி தன் குழந்தையுடனும், தங்கபாண்டியனின் மனைவி தன் குழந்தை உடனும் தோட்டத்திலிருந்து அவசரமாக வெளியேறி, நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் இருந்த போலீசாரிடம் தஞ்சமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், கோவை மண்டல டிஐஜி சசிமோகன், திருப்பூர் மாவட்ட எஸ்பி யாதவ் க்ரிஷ் அசோக் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தோட்டத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அங்கிருந்த மூர்த்தி மற்றும் தங்கபாண்டியன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கொலைக்குக் காரணமான மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சண்முகவேலின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூராய்வு முடிந்த நிலையில், அவரது உடல் காவல்துறை அதிகாரிகளின் மரியாதைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே, உடுமலை அருகே கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.