மதியம் 2.34: "இந்தியாவிலேயே சாதி ஆணவ கொலைக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதன்முறை. தீர்ப்பு நகல் வந்தபின்பு, விடுவிக்கப்பட்ட 3 பேரை எதிர்த்து மேல் முறையீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும்”, என அரசு வழக்கறிஞர் சங்கர நாராயணன் தெரிவித்தார்.
மதியம் 02.15 : சங்கர் கொலையை நியாயப்படுத்தி பேசிய இருவர் வெளியே வந்த போது, பொதுமக்கள் அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இருவரும் மிக பலமாக அடி உதை வாங்கி வெளியே சென்றனர். இதனால், சிறிது நேரம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதியம் 1.41: கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த மணிகண்டன், ஜெகதீசன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகியோருக்கு இரட்டை தூக்கு தண்டனை அறிவித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மீதமுள்ள இரண்டு குற்றவாளிகளில், ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அடைக்கலம் தந்தை மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மதியம் 12:29: மதியம் 2.50 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
மதியம் 12:20: “முழுமையான தீர்ப்பு வெளியான பிறகு என் கருத்தை தெரிவிக்கிறேன்.”, என கௌசல்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவரது தந்தை குற்றவாளி என அறிவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “குற்றவாளியை குற்றவாளி என்றுதானே சொல்ல வேண்டும்”, என கூறினார்.
மதியம் 12.15: தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு குற்றவாளிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதற்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதியம் 12.08: உடுமலை சங்கர் கொலை வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என, நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார். தாய் அன்னலஷ்மி, மாமா பாண்டிதுரை, வாகனம் ஏற்பாடு செய்த பிரசன்ன குமார் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
காலை 11.15: உடுமலை சங்கர் கொலை வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
காலை 11.13: சங்கரின் மனைவி கவுசல்யாவின் பெற்றோர் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலை வழக்கில், திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் இன்று (செவ்வாய் கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் என்ற பொறியியல் பட்டதாரி, பழனியை சேர்ந்த கௌசல்யாவை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதி இருவரையும் உடுமலை பேருந்து நிலையம் அருகே, ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கௌசல்யா படுகாயம் அடைந்து உயிர்பிழைத்தார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலஷ்மி, கௌசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு, வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இரு தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.