உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழங்கில் இன்று எங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது அநீதியானது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரிம் கோர்ட் செல்வோம். நீதி வாங்காமல் விடமட்டோம் என்று சங்கர் மனைவி கவுசல்யா கூறினார்.
சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட உடுமலைப்பேட்டை சங்கர் - கவுசல்யா ஜோடி மீது உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 3 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இதில் சங்கர் உயிரிழந்தார். அவரது மனைவி கவுசல்யா காயங்களுடன் தப்பினார். இந்த கொலை தொடர்பான வழக்கில் திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீபன் தன்ராஜ், என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய் மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில், சங்கர் கொலை வழக்கில் முதல் எதிரியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், தண்டனைக் குறைப்பு ஏதும் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தன்ராஜ் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டன் ஆகிய இருவரின் தண்டனையும் ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சங்கர் கொலை வழக்கில் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து குன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய கவுசல்யா, “எங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது ஒரு அநீதிதான். சங்கருடைய ரத்தத்துக்கு இது நீதியே இல்லை. ஏனென்றால், திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்குக்கும் சென்னையில் உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்குக்கும் இடையில் எனக்கும் இந்த வழக்குக்குமான தொடர்பு ரொம்ப தூரமாக இருந்தது. திருப்பூரில் நடந்த வழக்கு எனக்கு எல்லாமே தெரிந்திருந்தது. ஆனால், சென்னையில் அங்கே நடந்தது எதுவுமே எனக்கு தெரிவிக்கவில்லை. அதே போல, இந்த வழக்கில் டி.எஸ்.பி-யையும் மாற்றினார்கள். உயர் நீதிமன்றத்தில் எங்களுக்கு தனியாக வழக்கறிஞர் வைக்கமுடியாது. அரசாங்கம் மூலமாகத்தான் போக முடிந்தது. அதே போல, இப்போது அன்னலட்சுமியும் சின்னச்சாமியும் குற்றவாளிகள் இல்லையென்றால் எனது சங்கர் உயிர்ரோடு இருந்திருக்க வேண்டும். என்னுடன் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது அவன் உயிரோடு இல்லை. அப்படியென்றால், அவர்கள் எப்படி குற்றவாளிகள் இல்லாமல் ஆவார்கள். நாங்கள் சுப்ரிம் கோர்ட் போவோம். இந்த வழக்கில் நீதி வாங்காமல் நாங்கள் விடமாட்டோம். எனது சட்டப் போராட்டம் தொடரும். அதே போல, சங்கருக்கான நீதி என்பது அதுதான். நான் உயிரோடு இருக்கும் வரை, வாழ்ந்துகொண்டிருக்கும் வரை அந்த நீதியை வாங்காமல் நான் ஓய்ந்துபோகமாட்டேன்.” இவ்வாறு கவுசல்யா கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"