/tamil-ie/media/media_files/uploads/2023/07/New-Project14-1.jpg)
Traffic jam
கோவை மாவட்டத்தில் உக்கடம், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், அவிநாசி சாலை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. அதே சமயம் பல்வேறு பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் குழாய்கள் பதிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஏனெனில் உக்கடம் ஆத்துபாலம் மேம்பால பணிகளால் பேருந்துகள், கனரக வாகனங்கள் அனைத்தும் புட்டு விக்கி பாலம் வழியாக திருப்பி விடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது புட்டு விக்கி பாலம் பகுதியிலும் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பேருந்துகள் மற்றும் கனராக வாகனங்கள் ஆத்து பாலத்தில் இருந்து உக்கடம் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
உக்கடம் ஆத்துப்பாலம் இடையில் மேம்பால பணிகளை இன்னும் சரிவர முடியாத நேரத்தில் தற்பொழுது கனரக வாகனங்களும் இந்த வழியிலேயே திருப்பி விடப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வேலைகளுக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் இந்த 1 கி.மீ பாதையை கடப்பதற்கு சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் ஆவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். சில சமயங்களில் ஆம்புலன்ஸ்களும் இந்த வாகன நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அப்பகுதியில் வசிப்போர் அனைவரும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-23-at-12.54.21.jpeg)
மேலும் கோவை மாநகரில் மேம்பால பணிகள் ஒருபுறம் நடைபெறும் பொழுது அதற்காக மாற்று பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது அச்சாலையிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் எவ்வழியில் செல்வது என்று தெரியாமல் அனைவரும் ஒரே சாலையை உபயோகிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு சாலையில் பணிகளை நிறைவடைந்து விட்டு மற்றொரு சாலையில் பணிகளை துவக்கினால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருக்கும் என்றும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.