பி.ரஹ்மான்- கோவை மாவட்டம்.
கோவை சிங்காநல்லூர் சிவா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். சிறந்த சமூக ஊடக செயல்பாட்டிற்காக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் விருது பெற்ற இவர் ட்விட்டரில் உமா கார்க்கி26 என்ற பெயரில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், உமா கார்க்கியை தி.மு.க தலைவர் கருணாநிதி, பெரியார், முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பா.ஜ.க ஆதரவாளர் உமா கார்க்கி கைது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஸ் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் - தந்தை பெரியார் மற்றும் அவரது மனைவி குறித்து தவறான வார்த்தைகளை குறிப்பிட்டு - சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இரு மதங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இந்துக்களுக்கு மட்டுமே ஓட்டு இருக்க வேண்டும், வேற யாருக்கும் ஓட்டு இருக்க கூடாது என ஜனநாயக உரிமையை பறிக்கின்ற வகையில் பதிவிட்டுள்ளார். தமிழகம் அமைதி பூங்காவாக விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இது போன்ற பதிவுகளை பதிவிட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய வெறுப்பு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். உமா கார்கி, தந்தையர் தினம், காதலர் தினம், போன்றவற்றிற்கு எல்லாம் பெரியார் புகைப்படத்தை பயன்படுத்தி பதிவிட்டு வருகிறார். அதே போல் ஹிட்லர் புகைப்படத்தை கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் சர்வாதிகார போக்குடன் நடந்து வருவது போல் பதிவிட்டுள்ளார். இது போன்று சர்வாதிகார போக்கை ஒன்றிய அரசு இவர்களை போன்ற ஆட்களை கொண்டு திணிக்க பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவை தி.மு.க வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளரான ஹரிஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான், உமா கார்க்கி கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.