விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று மாலை (ஜன.3) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். அவர் பேசுகையில், "பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நடக்கும் போது தட்டி கேட்கும் உரிமை எல்லாருக்கும் உள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவம் குறித்து இதுவரை ஏன் பேசவில்லை.
அரசியல் தான் அவர்களுக்கு முக்கியம். தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் கனவில் உள்ளது. அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். தமிழக கிராமத்தில் பட்டா கேட்டு சிறு இயக்கம் நடத்தினாலும், தெருமுனை கூட்டம் என்றாலும், காவல்துறை தடை போட்டு வழக்கு போடுகிறது. ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்றால் அனுமதி மறுக்கிறது.
மரியாதைக்குரிய முதல்வர் ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? ". எப்படி காவல்துறை கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது.
போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஓரு ஆர்பாட்டம் என்றால் அதற்கு அனுமதியை ரத்து செய்து கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? எனவே, இப்படிபட்ட போக்கை காவல்துறை மாற்றிக் கொள்ள வேண்டும்" என பாலகிருஷ்ணன் கடுமையாக தாக்கிப் பேசினார்.