சென்னையில் வேலை வாங்கித் தருவதாக கூறி இணையதளத்தில் விளம்பரம் செய்து ஆண்களை விபசாரத்துக்கு அழைக்கும் கும்பல் ஒன்று செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. வேலையில்லாத இளைஞர்களைக் குறிவைத்து பணத்தைப் பறிக்கும் குற்றங்களைச் செய்து வரும் அந்தக் கும்பலை உடனே கைது செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் மட்டுமே லட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை வாய்ப்பு தேடி அலைகின்றனர். இதனைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தினமும் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இணையத்தில் விளம்பரம் அளிக்கிறது. ஆனால், அந்த நிறுவனங்களை நம்பி களம் இறங்கினால் எதிர்பாராத ஏமாற்றத்தைச் சந்திக்கும் வாய்ப்புள்ளது. இத்தகைய ஏமாற்றும் குற்றங்களை செய்து வருகிறது ஒரு கும்பல்.
வேலையில்லா இளைஞர்கள் அல்லது அதிக சம்பளம் இருக்கும் வேலையைத் தேடும் இளைஞர்களைக் குறி வைத்து பணம் ஆசை காட்டி, பிறகு அவர்களை ஏமாற்றி விபச்சாரத்திற்குள் தள்ளுகிறது இந்தக் கும்பல். இதில் ஏமாற்றம் அடைந்து இது போன்ற ஒரு சிக்கலில் இருந்து தப்பி வந்த இளைஞர் ஒருவர் சென்னை மாநகர போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் அஷோக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 8ம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதுவரை அவர் வாங்கும் சம்பளம் குடும்பத்தை நடத்த போதியதாக இல்லை என்பதால், அதிக சம்பளம் இருக்கும் வேலைகளை தேடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இணையதளத்தில் இருந்த தொடர்பு எண்ணில் பேசியுள்ளார். அவரிடம் பேசிய பெண்மணி ஒருவர் பத்தாயிரம் ரூபாய் முன்பணம் கட்டினால் வேலை நிச்சயம் வாங்கித் தருவதாக கூறினார். அதை நம்பி பல தவணைகளில் கருணாமூர்த்தி என்ற நபரின் எஸ்பிஐ வங்கி கணக்கில் பத்தாயிரம் ரூபாய் வரை பணம் கட்டினார் அஷோக். முன்னதாக போனில் பேசிய பெண்ணிடம் என்ன வேலை என்று தொடர்ந்து கேட்டார் அஷோக். அதற்கு அந்தப் பெண்ணும் ‘கால் பாய்’ வேலைதான் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ஏமாற்றப்பட்ட இளைஞர் அஷோக். முதலில் நல்ல நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் செலுத்திய பிறகு விபச்சார தொழிலை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
கோவத்தில் கொந்தளித்த அஷோக், விபச்சாரத்தில் அவரை வற்புறுத்திய கும்பலிடம் தான் செலுத்திய பணத்தைத் திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணத்தை தர மறுத்துள்ளனர். மேலும் அவரை மிரட்டியுள்ளனர். எனவே இது குறித்து அந்த இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில், தன்னை ஏமாற்றிய நிறுவனத்தை நேரில் சென்று அணுகியபோது பணத்தை திரும்பத் தர மறுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் முன்பு பேசிய எண்ணைத் தொடர்பு கொண்டபோது எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் போலீஸ் விரைவில் அந்தக் கும்பலை கைது செய்ய வேண்டும் என்று இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் தகவல் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பவங்களை எடுத்துக்காட்டாக வைத்து, வேலை வாய்ப்பு விளம்பரங்களைக் கண்டு இளைஞர்கள் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.