மக்களின் குறைகளை நேரடியாக களத்திற்கே வந்து தெரிந்து கொண்டு அதற்கு தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தினை அறிவித்தார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், " 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' முகாம் ஒவ்வொரு மாதமும் 4-வது புதன்கிழமை நடத்தப்பட வேண்டும்.
ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆண்டு முழுவதும் அனைத்து தாலுகாக்களும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில், ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஆண்டிற்கான அட்டவணையை மாவட்ட ஆட்சியர் வரைய வேண்டும்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்கள், நிலுவையில் உள்ள மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' முகாம்கள் நடத்துவது குறித்த அறிக்கையை ஒவ்வொரு மாதம் 5-ம் தேதிக்கு முன், கூடுதல் தலைமைச் செயலர்/வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“