திருச்சி மாநகராட்சியிலுள்ள 32, 33-வது வார்டு பொதுமக்களுக்காக, ”உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் இன்று நடத்தப்பட்டது. இந்த முகாம் எடத்தெருவில் உள்ள பழைய கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவர் பட்டா மாறுதல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்வில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திமுக மாநகரச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், துணை மேயர் திவ்யா, மண்டலக் குழுத் தலைவர் ஜெய நிர்மலா, திமுக பகுதிச் செயலாளர் டி.பி.எஸ்.எஸ். ராஜ் முகமது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டனர். இந்த முகாமில், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று உடனடியாகத் தீர்வு கண்டனர்.
இந்த முகாமில் இடம்பெற்ற துறைகள்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை. இதுபோன்று, மொத்தம் 13 துறைகள், 43 சேவைகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதுதவிர, இலவச மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன.