`உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் மூலம் இதுவரை பெறப்பட்ட 12.65 லட்சம் மனுக்களில், 5.88 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை கோரி மனு அளித்துள்ளனர் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது குடும்பத் தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், அரசு ஊழியர்கள், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனால், குறைந்த ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், விவசாய நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களின் குடும்பத் தலைவிகள் பலர் மகளிர் உரிமைத் தொகை பெற முடியாமல் போனது. இந்த பிரிவினர் குடும்பத் தலைவிகள் இடையே அதிருப்தி நிலவியது.
இதனால், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து, மகளிர் உரிமைத் தொகை கோரி குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் நோக்கில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை கடந்த ஜூலை 15-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தார்.'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் முகாம்கள் நவம்பர் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நடைபெற உள்ளது. இந்த திட்டத்தில் மக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கலாம் என்றும் மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில் 5.88 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை கோரி மனு அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் முகாம்களில் மனு அளித்து 45 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.