மக்களின் அன்றாட தேவைகளையும், அரசுத் திட்டங்களின் பலன்களையும் அவர்களது இல்லங்களுக்கே நேரடியாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15,) சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட வாண்டையார் திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. திட்டத்தை தொடங்கி வைத்த கையோடு, அவர் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
இந்த புதிய திட்டம் "முதல்வரின் முகவரி" திட்டத்தின் வழியே செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புறப் பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. மாநிலம் முழுவதும், நகர்ப்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் என மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதன் மூலம் பொதுமக்களின் குறைகள் 45 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களும் இந்த முகாம்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள மற்றும் விடுபட்ட பெண்கள் இந்த முகாம்களில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்கலாம். தமிழகம் முழுவதும் நவம்பர் 30-ம் தேதி வரை இந்த முகாம்கள் நடைபெறும்.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பொதுமக்கள் கீழ்க்கண்ட அரசின் சேவைகளை பெற முடியும்:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்,
முதியோர் / விதவை / கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை,
ஆதார் திருத்தம் - புதிய பதிவுகள்,
ரேஷன் கார்டுகள் திருத்தம் - புதிய பதிவுகள்,
பிறப்பு / இறப்புச் சான்றிதழ்,
இருப்பிட சான்றிதழ்கள்,
சாதிச் சான்றிதழ்,
அனைத்து நலவாரியங்களில் உறுப்பினர் பதிவு,
கலைஞர் கைவினைத் திட்டம்,
அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம்,
பாதாள சாக்கடை இணைப்பு,
குடிநீர் இணைப்புகள்,
சொத்து வரி பெயர் மாற்றம்,
சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை,
முழுமையான உடற் பரிசோதனை உள்ளிட்ட அரசின் 46 சேவைகள்.
முகாம்களில் பொதுமக்கள் கொடுக்க வேண்டிய படிவங்கள் மற்றும் அரசுத்துறைகள் வழங்கும் பல்வேறு சேவைகள் குறித்த விளக்க பிரசுரங்கள் அந்தந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து முகாம் தினத்தன்று காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரை நடைபெறும் முகாம்களில் நேரில் அளித்துப் பயன்பெறலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்.