தமிழ்நாடு நிதியமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். இவரது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டு புதுக்கோட்டை மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த நிர்வாகிக்கு பணம் கேட்டு மெசேஜ் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல அமைப்பாளராக இருப்பவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் குமார். இவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ப்ரோபைல் படத்தோடு தொடர்பு கொண்ட மர்ம நபர், நன்றாக உள்ளீர்களா எனக் கேட்டு சகஜமாக மெசேஜ் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, அவசரத் தேவைக்காக ரூ.13,500 பணம் தேவைப்படுவதாகவும் உடனடியாக அனுப்புமாறும் செந்தில் குமாரிடம் அந்த நபர் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த செந்தில் குமார், இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களிலும் மாவட்ட ஆட்சியர், முக்கிய அரசியல் தலைவர், பிரமுகர்களின் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு இதுபோன்று பணம் கேட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், எச்சரிகையுடனும் இருக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil