த . வளவன்
Union Budget 2022-23 : இந்தியாவின் ஒருங்கிணைந்த 2022-23-க்கான மத்திய அரசின் பட்ஜெட், வருகிற முதல் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் இந்த பட்ஜெட்டிலாவது அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் தமிழகத்தின் தென் மாவட்ட கடலோர கிராம மக்கள்.
தமிழகத்தில் தற்போது சுமார் 3852 கி.மீ அளவில் இருப்பு பாதை வழித்தடங்கள் உள்ளன. தமிழக மக்கள் தொகை மற்றும் பரப்பளவுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் 1,30,058 பரப்பளவுக்கு 4131 கி.மீ இருப்புப் பாதை வழித்தடங்கள் என்பது குறைவானது. மக்கள் தொகை பெருக்கத்தை போல ரயில்களின் எண்ணிக்கையையும் கணக்கிட்டால் தமிழகம் அகில இந்திய அளவில் இரண்டாவது பெரிய மாநிலம். இந்த ரயில் எண்ணிக்கை என்பது 1000 சதுர கி.மீ பரப்பளவில் எவ்வளவு ரயில்வே இருப்புப் பாதைகள் உள்ளன என்பதை கணக்கிடுவது. தமிழகத்தில் தற்போது இதன் எண்ணிக்கை 32.07 ஆக உள்ளது. அதை படிப்படியாக அதிகரிக்க வேண்டும். உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை விட ரயில்கள் எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளன.
தமிழகம் மத்திய அரசுக்கு செலுத்தும் வரி வருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளது. வரி வருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளது போன்று ரயில் எண்ணிக்கையிலும் இரண்டாம் இடத்தில் வர வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒரு புதிய இருப்புப்பாதை திட்டத்தையாவது செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகம் மேலும் வளர்ச்சி பாதையில் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
தென் மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, தொழில் வளர்ச்சி இல்லாமை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தென் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலைவாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில் விருதுநகர் - மானாமதுரை, திருநெல்வேலி – திருவனந்தபுரம் பாதை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில் பாதைகள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. திருநெல்வேலி – நாகர்கோவில் 74 கி.மீ புதிய அகல ரயில் பாதை 08-04-1981-ம் தேதியும், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் 87 கி.மீ புதிய அகல ரயில் பாதை – 15-04-1979 அன்றும் விருதுநகர் - அருப்புக்கோட்டை மீட்டர்கேஜ் பாதை 01-09-1963 அன்றும், அருப்புக்கோட்டை – மானாமதுரை மீட்டர்கேஜ் பாதை 02-05-1964 அன்றும் பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்தன. இந்த திட்டங்கள் மட்டுமே இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தென் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இருப்புப் பாதைகள். அதன் பிறகு இதுவரை எந்த ஒரு புதிய ரயில் பாதையும் தென்மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை.
குலசேகரபட்டினம் ரயில் பாதை
திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் உடன்குடி – கே.பி.என் சந்தைக்கு ஆங்கிலேயர் காலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. தூத்துக்குடி, குலசேகரப்பட்டினம், கொற்கை ஆகிய துறைமுகங்களின் வாயிலாக பன்னாட்டு வணிகத்தில் கிழக்கிந்திய கம்பெனியினர் ஈடுபட்டனர். குலசேகரப்பட்டினத்தில் சர்க்கரை ஆலையை தொடங்கிய 1914ம் ஆண்டு தொடங்கப் பட்ட "பாரி அன் கோ' எனும் நிறுவனம் மூலம் குலசேகரப்பட்டினத்திலிருந்து திசையன்விளைக்கு 16.5 மைல் தூரத்திற்கு ரயில் பாதை அமைத்தனர். அப்பாதையில் 18.07.1915 முதல் பயணிகள் ரயில் ஒன்றும், சரக்கு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. இந்த ரயில் பாதை 1929ம் ஆண்டு திருச்செந்தூர் வரை மேலும் 27 மைல்கள் நீட்டிக்கப்பட்டது. திசையன்விளையில் இருந்து இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரன்பட்டினம், ஆலந்தலை வழியாக திருச்செந்தூருக்கு தினமும் மூன்று ரயில்களும், திசையன்விளை வாரச்சந்தை நாளான வெள்ளிக்கிழமை அன்றும் அதிகப்படியாக சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்பட்டது. திசையன்விளைக்கும் திருச்செந்தூருக்கும் இடையிலான பயணக்கட்டணம் 13 அணாவாக இருந்தது. இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக 4.2.1940 ல் இந்த ரயில் சேவை முற்றிலும் முடங்கி போனது. தற்போது இந்த பகுதியில் ரயில்கள் இயக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்கு புதிதாக இருப்பு பாதை அமைக்கப்படுமா என 06-08-1991-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் அப்போதைய ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் டாக்டர் ராஜேஸ்வரன். இந்த கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அவ்வாறு எந்த ஒரு திட்டமும் இல்லை என்று பதிலளித்துள்ளார். இதைப்போல் புதுக்கோட்டை மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், அறந்தாங்கியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புதிய இருப்புபாதை அமைத்தல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 24-02-2000 அன்று ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கும் அது மாதிரி எந்த ஒரு திட்டமும் இல்லை என்றே ரயில்வே அமைச்சர் தனது பதிலுரையில் கூறியிருக்கிறார்.
கன்னியாகுமரி – காரைக்குடி புதிய ரயில் பாதை
கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை புதிய ரயில் இருப்புப்பாதை தடம் அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவுறுத்தப்பட்டது. கிழக்கு கடற்கரை புதிய ரயில் இருப்பு பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி 2013-14-ம் ஆண்டு நிறைவு பெற்று முடிவடைந்து திட்ட மதிப்பீட்டை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே சமர்ப்பித்தது. இந்த ஆய்வுப்பணி இரண்டு பிரிவுகளாக நடந்தது.
முதல் பிரிவு காரைக்குடி – தூத்துக்குடி
காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய ரயில் பாதை அமைக்க ஆய்வு பணி நடைபெற்றது. இந்த ஆய்வு பணியில் 214.81 கி.மீ தூரம் ரயில் பாதை அமைக்க 879 கோடிகள் தேவைப்படும் என்று கூறப்பட்டது. இந்த வழித்தடம் தேவகோட்டை, தேவிப்பட்டிணம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, சூரங்குடி வழியாக தூத்துக்குடிக்கு வரும் விதத்தில் சர்வே செய்யப்பட்டது.
இரண்டாவது பிரிவு தூத்துக்குடி - கன்னியாகுமரி
கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடி வழியாக ராமநாதபுரம் வரை பாதை அமைக்க நடைபெற்ற ஆய்வு பணியில் இந்த திட்டம் 247.66 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க 1080 கோடிகள் தேவைப்படும் என்று சொல்லப்பட்டது. இந்த திட்டம் தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டினம், மணிநகர், திசையன்விளை, நாவலடி, கூடங்குளம், மகாராஜபுரம், பெருமாள்புரம் வழியாக கன்னியாகுமரி செல்லும்.
மொத்த ரயில் நிலையங்கள்
காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களையும் சேர்த்து 462.47 கி.மீ தூரத்தில் 1965.763 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கை சொல்கிறது.
ரேட் ஆப் ரிட்டன்
பொதுவாக ரயில்வே வாரியம் மற்றும் திட்டகுழு ஒரு புதிய ரயில்வே இருப்பு பாதை திட்டத்தை பல கோடி முதலீட்டில் செயல்படுத்தும் முன்பு அந்த திட்டம் பொருளாதார அளவில் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் தரும் என்பதை கணக்கில் கொண்டு தான் தீர்மானிப்பார்கள். இதை ரேட் ஆப் ரிட்டன் என்று கூறுவார்கள். இந்த கிழக்கு கடற்கரை பாதை ரயில்வே திட்டம் துறைமுகம், மின்திட்டங்கள், சரக்கு போக்குவரத்து, சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் என பல்வேறு வழிகளில் வரும் பொருளாதார வருமானங்களை கணக்கில் கொண்டு இந்த டேட் ஆப் ரிட்டன் கணக்கீடு செய்யப்படும். இந்த கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்தில் காரைக்குடி – தூத்துக்குடி மைனஸ் -8.3 ரேட் ஆப் ரிட்டன் ஆகவும் தூத்துக்குடி - கன்னியாகுமரி பாதை -8.88 டேட் ஆப் ரிட்டன் ஆகவும் உள்ளது.
இவ்வாறு குறைவாக ரேட் ஆப் ரிட்டன் உள்ளதால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு தயங்குவதாக தெரிகிறது. இவ்வாறு குறைவாக ரேட் ஆப் ரிட்டன் வரும் திட்டங்களை ஆய்வு செய்து விட்டு அரசு கைவிட்டு விடும். இவ்வாறு கைவிடப்பட்ட திட்டங்கள் பல உள்ளன. ரேட் ஆப் ரிட்டன் குறைவாக உள்ள காரணத்தால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ரயில்வே வாரியம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த வழி தடத்தில் சுற்றுலா மற்றும் பல்வேறு ஆன்மீக தலங்கள் உள்ளன. இந்த தடம் அமைக்கப்படும் பட்சத்தில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்து மிகவும் வசதியாக அமையும். இந்த வழி தடத்தில் கூடங்குளம், உடன்குடி போன்ற பகுதிகளில் பல கோடி முதலீட்டுடன் கூடிய புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் கடலோர மாவட்டங்கள் அதிகமாக பயன்பெறும். இந்த திட்டம் வறண்ட மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமையும்.
கிடப்பில் கிடக்கும் திட்டம்
ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம், ரேட் ஆப் ரிட்டன் குறைவாக இருக்கும் என்ற காரணத்தால் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தென்மாவட்ட பயணிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தென்மாவட்ட வளர்ச்சிக்கு இந்த கிழக்கு கடற்கரை ரயில் பாதையை சிறப்பு திட்டத்தின் கீழ் மீண்டும் ஆய்வு செய்து வருகின்ற பட்ஜெட்டில் அறிவித்து சிறப்பு கவனம் செலுத்தி போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட வேண்டும்.
திருச்சியில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி நடைபெற்ற விழாவின் போது சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை வழியாக கன்னியாகுமரிக்கு இருப்பு பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்துக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்பதையும் சூசகமாக அவர் தெரிவித்தார். ஆனால் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வராததன் பின்னணி யாருக்கும் தெரியவில்லை.
கன்னியாகுமரி – நாகப்பட்டினம் பாதுகாப்பு வழித்தட சாலை
கன்னியாகுமரியில் இருந்து நாகப்பட்டினம் வரை 456 கி.மீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை – 32 என்று பெயரிட்டு நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சாலை ராணுவ விமானங்கள் இறங்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக தகவல் இருக்கிறது.
இந்த இரண்டு திட்டங்களை செயல்படுத்தும் போது இந்த பகுதியில் புதிய இருப்புபாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சமீபத்தில் மதுரை மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற எம்.பி க்கள் கூட்டத்தில் தென்மாவட்ட எம்.பி க்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியாக கூட்டு நிறுவனம் அமைக்க கோரிக்கை
பல்வேறு மாநிலங்களில் புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரயில்வே துறையுடன் இணைந்து கூட்டு நிறுவனம் உருவாக்கி 50 சதம் நிதியை மாநில அரசுகள் கொடுத்து புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிக அளவு ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவ்வாறு கிடப்பில் போடப்பட்ட நிலையில் தான் இந்த கிழக்கு கடற்கரை பாதை திட்டம் உள்ளது. இந்த கிழக்கு கடற்கரை இருப்பு பாதை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரயில்வே துறை உடன் இணைந்து கூட்டு நிறுவனம் உருவாக்கிய இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளா அரசு சபரிமலை ரயில் பாதை திட்டத்தை 50 சத நிதி கொடுத்து அந்த பாதையிலிருந்து வரும் வருவாயில் 50 சத நிதியை கேரளா அரசுக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு தமிழக அரசும் இந்த கிழக்கு கடற்கரை பாதை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.