Advertisment

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: கட்சிகள் கண்டனம்

மத்திய நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் உரையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தைகளே ஒருமுறை கூட இடம்பெறாத நிலையில், அதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
union budget 2024 Tamil Nadu Ignored political Parties Condemn Tamil News

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை, தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, 80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

Advertisment

இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பீகார், ஆந்திராவை ஆளும் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சிகள் தங்கள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தன. இந்த கோரிக்கைக்கு இணங்க ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆந்திராவுக்கு ரூ. 15,000 கோடியும், பீகாரின் நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கு ரூ. 26,000 கோடியும் ஒதுக்கீடு செய்வதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

கண்டனம் 

இந்நிலையில், மத்திய நிதியமையச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் உரையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தைகளே ஒருமுறை கூட இடம்பெறவில்லை. வழக்கமாக திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியத்துடன் பட்ஜெட் உரை தொடங்கப்படும். இம்முறை அதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் - செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகளும், அதனைச் சார்ந்த தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிற்கானதா? - சீமான் கேள்வி 

"2024ம் ஆண்டிற்கான பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிற்கானதா?, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமானதா. பாஜக அரசின் 2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தும் நடைமுறைப்படுத்த முடியாத கவர்ச்சிகர அறிவிப்புகளைக் கொண்ட கற்பனை அறிக்கையாகும். 

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது. விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காததது இந்திய மக்களின் நலன்மீதான பாஜக அரசின் அக்கறையின்மையை மீண்டும் வெளிப்படுத்துகிறது. 

தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களை முற்று முழுதாக புறக்கணித்து, கூட்டணி ஆட்சியைத் தக்க வைப்பதையே குறிக்கோளாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள, இந்நிதிநிலை அறிக்கையிலிருந்து இந்தியா முழுமைக்குமான பாஜகவின் வீழ்ச்சி உறுதியாய் தொடங்கும்”

இந்நிதிநிலை அறிக்கை மூலம், பாஜக அரசின் முதன்மை கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகார் மற்றுப் ஆந்திராவிற்கு நிதிகளை ஒதுக்கி, இந்தியாவின் இதர மாநில மக்களைத் தெருக்கோடியில் நிறுத்தியுள்ளார். அதிகம் வரிச்செலுத்துவதில் முதன்மையான இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எவ்வித சிறப்புத் திட்டத்தையும் கடந்த 11 ஆண்டுகால நிதிநிலை அறிக்கையில் ஒருமுறைகூட பாஜக அரசு அறிவிக்காதது ஏன்?. 

தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க-விற்கு வாக்களிக்கவில்லை என்பதால் தொடர்ச்சியாகப் பழிவாங்குவதைப்போலவே ஒவ்வொரு பாஜக ஆட்சியின் நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது. " என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

'திட்டங்கள் எதுவும் இல்லாமல் நிதிநிலை அறிக்கை' - வேல்முருகன் கண்டனம் 

“தமிழ்நாட்டுக்கான சிறப்பு திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத மத்திய அரசின் 2024-25 ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை. தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் வரியை வாங்கிச் செல்லும் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் எதுவும் இல்லாமல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருப்பது கண்டனத்துக்குரியது” என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியுள்ளார். 

'தமிழ்நாடு என்ற பெயரையே உச்சரிக்காத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்' - செல்வப்பெருந்தகை

பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற பெயரையே உச்சரிக்காத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வன்மையாக கண்டிக்கிறேன். மோடி ஆட்சியில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. ஆட்சியை, பதவியை, அதிகாரத்தை தக்க வைக்க பாஜக அரசு எந்த நிலைக்கும் செல்லும் என்பதற்கு இந்த பட்ஜெட்டே ஒரு உதாரணம்" என்று தூத்துக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 

'தமிழகத்திற்கு திட்டங்களை அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது' - இ.பி.எஸ் 

2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித்  தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது!

இந்த வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை. குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.

தமிழகத்திற்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு வாக்களித்து, 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக மக்கள் வெற்றிபெறச் செய்தார்கள். திமுக-கூட்டணிக் கட்சிகளுக்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் பெற்றுத் தராதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் 2019 முதல் 2024-ஆம் ஆண்டுவரை தமிழகத்தின் நன்மைக்காக எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்தது போல், அமைதியாக காலம் தள்ளுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்." என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

'தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது' - ராமதாஸ்

பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமானவரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன.

ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கடந்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்றால், கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 2023 - 24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிலையான நிதிநிலை அறிக்கையில் இந்த 3 துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கான  நிதி ஒதுக்கீடு ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும், காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, அதிக விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்படும், அடுத்த இரு ஆண்டுகளில் ஒரு கோடி உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2.66 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும், ஏழைக் குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. இவை வேளாண் வளர்ச்சிக்கும், கிராமப்புற வறுமை ஒழிப்புக்கும் வழி வகுக்கும்.

அடுத்து வரும் ஆண்டுகளில் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும், ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை, ஒருமுறை உதவியாக ரூ.6,000 நிதியுடன் தொழில்பழகுனர் பயிற்சி அளிக்கப்படும், முதல் முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு முதல் மாதத்தில் மட்டும் இரட்டை ஊதியம் வழங்கப்படும், அரசின் வேறு எந்த சலுகைகளையும் பெறாதவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும், தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகை வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

தங்கம் மற்றும் வெள்ளி கடத்தலைத் தடுக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி முழுமையாக குறைக்கப்படவில்லை என்றாலும் கூட, 15 விழுக்காட்டிலிருந்து  6% ஆக குறைகப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதாகும். அதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.4200 வரை குறையக் கூடும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது மட்டுமின்றி, தங்கம் கடத்தி வரப்படுவதையும் தடுக்கும். செல்பேசிகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலையும் குறையும்.

நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது வருமான வரிகளில் மாற்றங்கள் செய்யப்படுமா? என்பதைத் தான். புதிய வருமானவரி முறையில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அதனால், ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.17,500 வரை மிச்சமாகும் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. புதிய வருமானவரி முறை செலவுகளை ஊக்குவிக்கக்கூடியது, பழைய வருமான வரி முறை சேமிப்பை ஊக்குவிக்கக் கூடியதாகும். புதிய வருமானவரி முறையில் சலுகை  வழங்கியதன் மூலம் செலவுகளை அரசு ஊக்குவிக்கிறது. இது குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றாலும், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சேமிப்புகள் தான் கை கொடுக்கும் என்பதால் பழைய வருமானவரி விகிதங்களிலும் அரசு மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

ஆந்திரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு பல சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் மற்றும்  சென்னை இடையிலான தொழில்வழிச் சாலை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும் பயன்கள் கிடைக்கும். அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. நீண்டகாலமாக  எதிர்பார்க்கப்படும் கோதாவரி மற்றும் காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும்  மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார். 

தமிழ்நாட்டுக்கு அறிவிப்பில் ஏதும் இல்லையே - எம்.பி. சு.வெங்கடேசன்

“தமிழ்நாட்டுக்கு அறிவிப்பில் ஏதும் இல்லையே! நிதியமைச்சரே வழக்கமாக மேற்கோள் காட்டும் திருக்குறளும் இல்லையே!” என்றும் மதுரை  எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

“தமிழ்நாட்டிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை. வழக்கமாகச் சொல்லும் திருக்குறள் உட்பட. பட்ஜெட்டில் ஆரவாரமான அறிவிப்புகள். ஆனால், எங்கே இருந்து நிதி ஆதாரங்கள் என்பதே கேள்வி! உலகம் முழுவதும் செல்வ வரி, வாரிசுரிமை வரி, கார்ப்பரேட் வரி உயர்வுகள் பற்றிய விவாதம். ஆனால், இந்திய பட்ஜெட்டில் அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுகிற கார்ப்பரேட் வரி குறைப்பு. தேசியம் பேசுகிற அரசாங்கத்தின் அளவற்ற அன்னிய பாசம்.

விவசாயிகளுக்கு விளைச்சல் செலவினத்தை விட 50 சதவீதம் கூடுதலாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் என நிதி அமைச்சர் அறிவிப்பு. மறைந்த விவசாய அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைத்த C 2 + 50 % ஆ அரசால் தரப்படுகிறது? பதினோராவது ஆண்டாக ஆட்சியில் தொடர்கிற நீங்கள் இப்போதும் இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் கடந்து போகிறீர்களே.. இது ஏமாற்று அல்லவா!

4 கோடி வேலை வாய்ப்பு என்று அதிரடியாய் அறிவிப்பு. 2014இல் 10 கோடி என்று அறிவித்த அதிரடி என்ன ஆனது! உங்கள அதிரடி அறிவிப்பு எல்லாம் இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்பில் பேரிடியாக மாறியது தானே அனுபவம்! உங்கள் 4 கோடி அறிவிப்பில் "பக்கா" வேலை எவ்வளவு? "பக்கோடா வேலை" எவ்வளவு?

இந்திய வளர்ச்சி "பளிச்சிடும் முன்னுதாரணம்" என்று தங்களுக்கு தானே பாராட்டி கொள்ளும் அரசே! உலகின் அதிகமான ஏற்றத் தாழ்வு கொண்ட தேசம் இந்தியாதான் என்ற சாதனையே உங்கள் வளர்ச்சியின் குணம் என்பதை சொல்ல மறந்து விட்டீர்களே! வளர்ச்சி யாருக்கு. பில்லியனர்களுக்கா? ஏழை, நடுத்தர மக்களுக்கா?

இந்திய வளர்ச்சி "பளிச்சிடும் முன்னுதாரணம்" என்று தங்களுக்கு தானே பாராட்டி கொள்ளும் அரசே! உலகின் அதிகமான ஏற்றத் தாழ்வு கொண்ட தேசம் இந்தியாதான் என்ற சாதனையே உங்கள் வளர்ச்சியின் குணம் என்பதை சொல்ல மறந்து விட்டீர்களே! வளர்ச்சி யாருக்கு. பில்லியனர்களுக்கா? ஏழை, நடுத்தர மக்களுக்கா?

பீகார், ஆந்திரா சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு. 10 ஆண்டுகளாக எவ்வளவு புறக்கணித்தீர்கள் என்பதன் ஒப்புதலா? உங்கள் அரசை இழுக்கும் இரட்டை என்ஜின்களை கழட்டி விடும் வரை இப்படிப்பட்ட அறிவிப்புகள் வெளிவருமோ! தமிழ்நாட்டுக்கு அறிவிப்பில் ஏதும் இல்லையே! நிதியமைச்சரே வழக்கமாக மேற்கோள் காட்டும் திருக்குறளும் இல்லையே!

ஆதார தொழில் வளர்ச்சிக்காக மூலதன செலவு 11 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் அறிவிப்பு. ஆதார தொழில் வளர்ச்சிக்கு அமுத சுரபியாக உள்ள எல்.ஐ.சி யை பலப்படுத்துவோம் என்று அறிவிக்க வேண்டாமா? எல்.ஐ.சியின் பங்கு விற்பனையை தொடர்ந்தால் ஆதார தொழில் வளர்ச்சிக்கு எங்கே இருந்து வரும் பணம்?” என்று குறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Nirmala Sitharaman Union Budget Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment