ரயில்வே திட்டங்களுக்கான நிலங்களை மாநில அரசு கையகப்படுத்தி தருவதில் மாநில அரசு தாமதமாக்கி தருவதால் திட்டங்கள் மெதுவாக நடைபெறுகிறது என்று ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இந்தியாவில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.க அரசில், நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், நேற்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். 7-வது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக, 6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்கரளை சந்தித்த ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கூறுகையில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ6362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் அரசை விட 7 மடங்கு அதிகமான நிதியாகும். ரூ 33467 செலவில், 2857 கி.மீ தொலைவுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் 1302 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. விமான நிலையங்களுக்கு நிகராக, சென்னை கடற்கரை, எழும்பூர், செங்கல்பட்டு, கிண்டி உள்ளிட்ட 77 ரயில் நிலையங்கள் அதி நவீனமாயமாக்கப்பட உள்ளன. சென்னை எழும்பூர் 4-வது வழித்தட திட்டத்திற்கு, நிலம் கையகப்படுத்துவதற்கு, தமிழக அரசு தாமதம் செய்கிறது. இதன் காரணமாகத்தான் ரயில்வே திட்டங்கள் தாமதமாகி வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்களை செயல்படுத்த 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் தேவைப்படுகிறது. தற்போது 879 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே திட்டங்கள் தாமதமாகி வரும் நிலையில், தமிழகத்தில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில்வே திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என்று தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“