தேசிய கல்விக்கொள்கை நமது மொழியியல், கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க அமல்படுத்தப்படுகிறது. எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கு இடமில்லை, கல்வியில் அரசியலை புகுத்தாதீர்கள் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்பது கூட்டாட்சி தத்துவத்தை மீறுவதாகும். லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி கல்வி நிதி ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கடிதத்தில், “தேசிய கல்விக்கொள்கை, மும்மொழிக்கொள்கை தொடர்பாக நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நமது நாட்டின் கல்வி முறையின் எதிர்காலம் குறித்த அக்கறையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். பிரதமர் மோடிக்கு நீங்கள் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) எழுதிய கடிதம் கூட்டாட்சி தத்துவத்தின் அம்சங்களுக்கு எதிரானது. சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. பல்வேறு மாற்றங்களை செய்யும் சீர்திருத்தங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்ததில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இருப்பினும் அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம். தேசிய கல்விக் கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பது பொருத்தமற்றது. தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது. தேசிய கல்விக்கொள்கை நமது மொழியியல், கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க அமல்படுத்தப்படுகிறது. எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கு இடமில்லை.
பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. மாநில கல்விச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை செய்யும் வகையில் தேசிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. சமக்ர சிக்ஷா, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தேசிய கல்விக்கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பி.எம். ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த மறுப்பதால் 5 ஆயிரம் கோடி ரூபாயை இழக்கிறது. மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த உறுதியாக உள்ளது. அரசியல் வேறுபாடுகளை மறந்து தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.” என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.