அரிட்டாபட்டி பல்லுயிர் தளம் என்பதாலும், விவசாய பகுதி என்பதாலும் இத்திட்டத்தை ரத்து செய்து பிரதமர் மோடி உத்தரவிட்டார் என்றும் அரசியல் கணக்கிற்காக பா.ஜ.க எதுவும் செய்யாது என்றும் அ. வல்லாளபட்டியில் நடந்த பாராட்டு விழாவில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக அ.வள்ளாலப்பட்டியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் வியாழக்கிழமை (ஜனவரி 30) பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி பேசுகையில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நாட்டின் வளர்ச்சிக்கும், ஏழை, எளிய மக்களின் நலனுக்குமான அரசு. தமிழ் கலச்சாரம் உட்பட நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை மோடி அரசு பாதுகாத்து வருகிறது. பிரதமர் மோடி மீது அளவு கடந்து அன்பு செலுத்தும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.
“பிரதமர் மோடி உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமை, கலாச்சாரம், பாரம்பரியத்தையும், அவற்றின் சிறப்புகளையும் சொல்லி வருகிறார். நாடாளுமன்றத்தில் தமிழர்களின் செங்கோலை அமைத்து பெருமைப்படுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவால் தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பெருமைகள் உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.” என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, ஜி20 மாநாட்டில் உலக தலைவர்கள் முன்பு பிரதமர் மோடி பேசும்போது, இந்தியா உலக நாடுகளுக்கு ஜனநாயக வழிமுறைகளை கற்றுக் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார். உலகத்தில் ஜனநாயகத்துக்கு முன்மாதிரியாக தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு இருப்பதாக அப்போது பிரதமர் மோடி தெரிவித்தார். கிராம சபைகளுக்கு கூட தேர்தல் நடத்த வேண்டும் என்பதை அரசியலமைப்பு சட்டமாக வைத்திருந்தவர்கள் தமிழர்கள்.” என்று பேசினார்.
“ஜல்லிக்கட்டு பிரச்சினை வந்தபோது, சிறப்பு கவனம் செலுத்தி ஜல்லிக்கட்டை திரும்ப கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் பண்பாட்டை காக்க எப்போதெல்லாம், என்னவெல்லாம் செய்ய வேண்டுமா அவற்றை பிரதமர் செய்து வருகிறார். குஜராத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம், காசி தமிழ் சங்கமம் நடத்தி தமிழின் பெருமை உலகிற்கு எடுத்துச் சொன்னார். திருக்குறள், மணிமேகலை போன்ற தமிழ் சங்க இலக்கியங்களை பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து உலகம் முழுவதும் தமிழின் பெருமை தெரிய வைத்துள்ளார்.” என்று கிஷன் ரெட்டி கூறினார்.
தமிழக மீனவர்கள் கைது குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, “இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது பிரதமர் மோடி ராஜதந்திர நடவடிக்கை மூலம் அவர்களை பத்திரமாக மீட்டு வருகிறார். இவற்றை பிரதமர் மோடி அரசியலுக்காக இல்லாமல், உண்மையில் தமிழ் மக்கள், தமிழ் பண்பாடு மற்றும் கலச்சாரத்தின் மீது வைத்துள்ள அன்பு காரணமாக செய்து வருகிறார். தமிழக மக்கள் மத்தியில் தேசியம் என்ற கொள்கை வளர்ச்சி பெற்று வருகிறது. அந்த வகையில் தமிழக மக்கள் பிரதமர் மோடியை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று கூறினார்.
மேலும், “அரிட்டாபட்டி பல்லுயிர் தளம் என்பதாலும், விவசாய பகுதி என்பதாலும் இத்திட்டத்தை ரத்து செய்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். அரசியல் கணக்கிற்காக பா.ஜ.க எதுவும் செய்யாது ” என்றும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.
“மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இப்பகுதியைச் சேர்ந்த அம்பலக்காரர்கள் டெல்லியில் என்னை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இந்த கோரிக்கை விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கிராம அம்பலக்காரர்கள் அனைவரும் என்னை ஊருக்கு அழைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று இங்கு வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அழைப்புக்கும், அன்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் அனுமதித்தால், அம்பலக்காரர்கள் அழைத்தால் மீண்டும் இங்கு வருவேன்” என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசினார்.